தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் முற்றுகை போராட்டம், தொழிற்சங்கம் அறிவிப்பு


தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் முற்றுகை போராட்டம், தொழிற்சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2018 4:00 AM IST (Updated: 15 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே நடந்த ரெயில் விபத்தில் ரெயில்வே பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

மதுரை,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு தினமும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ரெயில் பழனி அருகே விபத்துக்குள்ளானது. அதாவது, பழனி–திண்டுக்கல் ரெயில் பாதையில் கணக்கன்பட்டி அருகே மாட்டுப்பாதை என்ற பகுதியில் ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது.

இந்த கேட்டை கடந்து தான் ராமபட்டிணம் புதூர் என்ற ஊருக்கு செல்ல முடியும். இதற்கிடையே, அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் சம்பவத்தன்று காலை இந்த பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக ராமபட்டிணம் புதூரில் இருந்து மாட்டுப்பாதை நோக்கி வந்த பொக்லைன் எந்திரம், ஆளில்லாத ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, ரெயில் என்ஜின் பலத்த சேதமடைந்தது. பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்தவர் என 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

இந்த ரெயில் ஆளில்லாத ரெயில்வே கேட் அருகே வரும்போது தான் பொக்லைன் எந்திரம் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயல்வதை என்ஜின் டிரைவர் கவனித்துள்ளார். உடனே அவர் ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். ஆனாலும் அதை பொக்லைன் எந்திர டிரைவர் கவனிக்கவில்லை.

பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த டிரைவர் ஹரீஷ் ஹெட்போனை காதில் பொருத்திக்கொண்டு பாட்டு கேட்டபடியே எந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். இதனால் ரெயில் வரும் சத்தத்தை அவரால் கேட்க முடியவில்லை என்பது ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பன்னீர்செல்வம் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அந்த பகுதி தண்டவாள பராமரிப்பு என்ஜினீயருக்கு குற்றச்சாட்டு மெமோ வழங்கப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் கூறியதாவது:–

பழனி கணக்கன்பட்டி ஆளில்லாத ரெயில்வே கேட்டுக்கு, கேட்மித்ரா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தப்படி கேட் கீப்பர் பணிக்கு வருவதில்லை. அதனை தட்டிக்கேட்க வேண்டிய மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் சம்பந்தமே இல்லாத பணியாளர் மற்றும் என்ஜினீயர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையை உடனடியாக கோட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், கோட்ட மேலாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story