தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் இன்று கடைசி நாள்


தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:15 AM IST (Updated: 15 Sept 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் 15 வயது முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களுக்கும், தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2016-17 வரையிலான காலத்தில் செய்த இளைஞர் நலப் பணிகளுக்காக விருதுகள் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருது பெற விரும்பும் இளைஞர்கள் சமூக பணியாற்றி இருக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விருது பெற தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசும், பதக்கமும் வழங்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பதிவு துறை சட்டம் 1860-ன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு அமைப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த திட்டங்களை அறிவார்ந்த தன்மையுடன் மேம்படுத்த தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் செய்திருக்க கூடாது.

குறிப்பிட்ட சாதி, மத அடிப்படையில் தொண்டாற்றிய அமைப்புகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. எனவே 2016-17-ம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று( சனிக்கிழமை) கடைசிநாளாகும். தகுதியுடையவர்கள் http//innovate.mygov.in/nya/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story