மாவட்ட செய்திகள்

பர்கூர், வேப்பனப்பள்ளியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி + "||" + Bargur, Vepeppanapalli For pregnant women Social baby shower

பர்கூர், வேப்பனப்பள்ளியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

பர்கூர், வேப்பனப்பள்ளியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
பர்கூர், வேப்பனப்பள்ளியில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் 640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அசோக்குமார் எம்.பி., சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) அன்பு குளோரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர், கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.


அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு நடைபெறுகிறது. பர்கூரில் மட்டும் 640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது. இங்கு கலந்துக்கொண்டுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளை கேட்டு சுகாதாரமாகவும், ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்டு சுக பிரசவம் மூலம் குழந்தை பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு வளையல், குங்குமம், உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 5 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ரேணுகா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உதயசூரியன், முன்னாள் பால் வள தலைவர் தென்னரசு, தாசில்தார் மதுசெழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, ஹேமாவதி, வட்டார அலுவலர் (குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள்) சரளா, ஜெயந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 80 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு 5 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் குமார், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் ருக்குமணி, சமூக நலத்துறை அலுவலர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.