அந்தியூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அந்தியூர் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:15 PM GMT (Updated: 14 Sep 2018 7:48 PM GMT)

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்தியூர்,

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் பிரம்மதேசம்புதூர். இந்த கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அம்மாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள அந்தியூர்– ஆப்பக்கூடல் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தோம். மேலும் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்றுதான் செயல்பட்டு வந்தது. அதிலும் தண்ணீர் குறைந்துவிட்டதால் வீட்டு தேவைக்காக போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளிக்கையில், ‘அந்தியூர்– அம்மாபேட்டை ரோடு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு குழிகள் தோண்டப்பட்டன. அப்போது குழாய்கள் உடைந்து விட்டன. இதனால் குடிநீர் வினியோகம் செய்யமுடியவில்லை,’ என்றனர். உடனே பொதுமக்கள், ‘அந்தியூர் பேரூராட்சிக்கு எங்கள் பகுதி வழியாகத்தான் குடிநீர் குழாய் செல்கிறது. தற்காலிகமாக அதில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்தியூர்– ஆப்பக்கூடல் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story