கள்ளப்பெரம்பூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் ஆற்றில் மூழ்கி பலி


கள்ளப்பெரம்பூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் ஆற்றில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 14 Sep 2018 10:45 PM GMT (Updated: 14 Sep 2018 10:28 PM GMT)

கள்ளப்பெரம்பூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

கள்ளப்பெரம்பூர்,

நண்பர்களுடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பெரியார் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகன் லோகேஷ் (வயது16). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளி விடுமுறை என்பதால் லோகேஷ் தனது நண்பர்களுடன் ரெட்டிப்பாளையம் அருகே உள்ள கல்லணைக்கால்வாய் புது ஆற்றில் குளிக்க சென்றார்.

ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தபோது லோகேஷ் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் இது குறித்த தகவலை லோகேஷின் வீட்டில் சொன்னால் அவர்கள் திட்டுவார்களோ என்று பயந்து கொண்டு லோகேஷின் வீட்டில் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் வெளியில் சென்று லோகேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், லோகேஷின் பெற்றோர் தங்கள் மகனை தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் லோகேஷின் நண்பர்களிடம் விசாரித்தனர்.

அப்போதுதான் அவர்கள், தாங்கள் அனைவரும் ஆற்றுக்கு குளிக்க சென்றதையும் அங்கு லோகேஷ் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதையும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷின் பெற்றோர் கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனையடுத்து அன்று இரவு அந்த பகுதியின் ஆற்று கரையோரங்களில் போலீசார் லோகேஷை தேடி பார்த்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ரெட்டிப்பாளையத்தை அடுத்த ஆப்ரகாம் பண்டிதர் நகர் அருகே செல்லும் புது ஆற்றில் கரையோரத்தில் சிக்கி இருந்த லோகேஷின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் லோகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story