மத்திய அரசை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்


மத்திய அரசை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:37 PM GMT (Updated: 14 Sep 2018 11:37 PM GMT)

மத்திய அரசை கண்டித்து சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

சேலம்,

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக கூறி மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் சேலத்திலும் ஊர்வலம் நடந்தது. சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலத்தை முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஊர்வலம் பட்டைக்கோவில், கடைவீதி, திருவள்ளுவர் சிலை, கோட்டை வழியாக கலெக்டர் அலுவலகம் அருகே வந்தடைந்தது.

ஊர்வலத்தின் போது விமானம் போன்ற பலூன்களையும், மத்திய அரசை கண்டித்து எழுதிய பதாகைகளையும் காங்கிரசார் கைகளில் ஏந்தி வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கோஷ மிட்டனர்.

இதில் மாநில செய்தி தொடர்பாளர் இதயதுல்லா, தொழில் வல்லுனர் காங்கிரஸ் பிரிவு தலைவர் மோகன் குமாரமங்கலம், மாவட்ட தலைவர்கள் ஜெயபிரகாஷ், அர்த்தநாரி, முருகன், முன்னாள் எம்.பி. தேவதாஸ் உள்பட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து கே.வி.தங்கபாலு தலைமையில் சிலர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர். இதன்பின்னர் கே.வி.தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ரபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு விமானத்திற்கு ரூ.526 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக 36 விமானங்கள் வாங்கிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பா.ஜனதா அரசு அமைந்தவுடன் ஒரு விமானத்தை ரூ.1,670 கோடிக்கு வாங்கிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுவும் அனுபவமே இல்லாத நிறுவனத்துடன் பிரதமர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதன் மூலம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது. இதுபற்றி பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொய்யான தகவல் கூறுகிறார். ஊழல் தொடர்பாக ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒருகட்சி சாராமல் ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story