திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு


திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 12:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கத்தரிக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு புறப்பட்டது. இந்த லாரியை சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த காதர் பாஷா மகன் சலீம் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த லாரி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலையில் உள்ள கருணாவூர் பேட்டை என்ற இடத்தில் வந்த போது, சலீம் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் அவர் லாரியின் அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சலீம் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரிடம் திண்டிவனம் செல்வதற்கு வழி கேட்டனர்.

அதற்கு சலீம் தனக்கு வழி தெரியாது என்று கூறிவிட்டார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சலீமை தாக்கி பணம் கேட்டனர். உடனே அவர் சட்டை பையில் இருந்த 1,500 ரூபாயை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு இன்னும் பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் இனி பணம் இல்லை என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சலீமை குத்தினர். பின்னர் அவரது கால் சட்டை பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துக் கொண்ட 2 பேரும், அங்கு மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்று கொண்டிருந்தவருடன் ஏறி தப்பி சென்று விட்டனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சலீமை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலீமை கத்தியால் குத்தி விட்டு பணத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story