ரே‌ஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பாததை கண்டித்து விற்பனையாளர்கள் போராட்டம்


ரே‌ஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பாததை கண்டித்து விற்பனையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Sept 2018 4:30 AM IST (Updated: 16 Sept 2018 12:02 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் ரே‌ஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பாததை கண்டித்து குடோனை முற்றுகையிட்டு விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செஞ்சி,

செஞ்சியில் திண்டிவனம் சாலையில் ரே‌ஷன் பொருட்களுக்கான குடோன் உள்ளது. இங்கிருந்து செஞ்சி மற்றும் மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள 300–க்கும் மேற்பட்ட ரே‌ஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரே‌ஷன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாத தொடக்கமும் ரே‌ஷன் பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த மாதத்திற்குரிய ரே‌ஷன் பொருட்கள் இதுவரை கடைகளுக்கு அனுப்பப்படவில்லை. இதனால் செஞ்சியை சுற்றியுள்ள ரே‌ஷன் கடை விற்பனையாளர்கள் நேற்று செஞ்சியில் உள்ள குடோனுக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற விற்பனையாளர்களை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.

பின்னர் ரே‌ஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பாதது குறித்து குடோன் பொறுப்பு அதிகாரியிடம் போலீசார் கேட்டதற்கு, லாரிகளில் மூட்டைகளை ஏற்றி இறக்க கூலி தொழிலாளர்கள் குறைந்த அளவிலேயே உள்ளனர்.

அதனால் பொருட்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து பொருட்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற விற்பனையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story