மைசூரு ராஜவீதியில் கம்பீர நடைபோடும் தசரா யானைகள் அர்ஜூனா, பலராமா யானைகளுக்கு மணல்மூட்டைகளை சுமக்கும் பயிற்சி


மைசூரு ராஜவீதியில் கம்பீர நடைபோடும் தசரா யானைகள் அர்ஜூனா, பலராமா யானைகளுக்கு மணல்மூட்டைகளை சுமக்கும் பயிற்சி
x
தினத்தந்தி 15 Sep 2018 10:45 PM GMT (Updated: 15 Sep 2018 7:02 PM GMT)

மைசூரு ராஜவீதியில் தசரா யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. கம்பீர நடைபோடும் தசரா யானைகளை தினமும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.

மைசூரு, 

மைசூரு ராஜவீதியில் தசரா யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. கம்பீர நடைபோடும் தசரா யானைகளை தினமும் பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள். இதில் அர்ஜூனா, பலராமா யானைகளுக்கு மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மைசூரு தசரா விழா

விஜயதசமி விழாவையொட்டி ஆண்டுதோறும் உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் இறுதிநாளில் ஜம்புசவாரி என்னும் யானைகள் ஊர்வலம் நடக்கும். இதை வெளிநாடு, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என சுமார் 5 லட்சம் பேர் கண்டுரசிப்பார்கள்.

இத்தகைய புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இந்த ஆண்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. மழையால் குடகு, தட்சிணகன்னடா, உடுப்பி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஜம்புசவாரி ஊர்வலம்

இந்த தசரா விழாவில் கலந்துகொள்ள முதற்கட்ட கஜபயணமாக கடந்த 2-ந்தேதி அர்ஜூனா, தனஞ்செயா, விக்ரமா, ஷைத்ரா, வரலட்சுமி, கஜேந்திரா ஆகிய 6 யானைகளும், 2-வது கட்ட கஜபயணமாக நேற்று முன்தினம் பலராமா, அபிமன்யூ, காவேரி, விஜயா, துரோனா, பிரசாந்த் ஆகிய 6 யானைகளும் மைசூருவுக்கு வந்துள்ளனர். அந்த யானைகள் மைசூரு அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த யானைகள் ஜம்புசவாரி ஊர்வலத்தின் போது அரண்மனையில் இருந்து தீப்பந்தம் விளையாட்டு நடைபெறும் பன்னிமண்டபம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும். மேலும் ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்படும். அத்துடன் அர்ஜூனா தங்க அம்பாரியையும், மற்ற யானைகள் சாமி சிலைகள்உள்ளிட்ட பொருட்களை சுமந்து செல்லும்.

கம்பீர நடைபோடும் தசரா யானைகள்

இதற்காக யானைகளுக்கு நடைபயிற்சியும், மணல் மூட்டைகளை சுமந்து செல்லும் பயிற்சியும், வெடிசத்தம் கேட்டு மிரளாமல் இருக்க பீரங்கி குண்டு வெடித்தும் பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக வந்த அர்ஜூனா உள்பட 6 யானைகளும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 12 யானைகளுக்கும் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் அர்ஜூனா, பலராமா ஆகிய 2 தசரா யானைகளுக்கும் மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரையிலான ராஜவீதியில் கம்பீர நடைபோடும் யானைகளை ஆங்காங்கே பொதுமக்கள் கூடிநின்று பார்த்து ரசித்தனர்.

Next Story