நெய்வேலி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி


நெய்வேலி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலியானார்கள்.

நெய்வேலி,

விநாயகர் சிலைகளை கரைக்க சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

நெய்வேலி அருகே உள்ள கைக்கிளார்குப்பம் தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார்(வயது 16). இவரும், 30–வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஆதிமூலம் மகன் மணிகண்டன்(17) என்பவரும் நண்பர்கள்.

நெய்வேலி 10–வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அஜித்குமார் பிளஸ்–1, மணிகண்டன் பிளஸ்–2 படித்து வந்தனர். சதுர்த்தி விழாவையொட்டி அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து 3 நாட்கள் ஆகிவிட்டதால் அதனை கரைக்கும்படி பெற்றோர் கூறினர். அதன்படி அஜித்குமாரும், மணிகண்டனும் நேற்று மாலை தங்களது வீட்டில் இருந்த விநாயகர் சிலைகளை எடுத்துக்கொண்டு கைக்கிளார்குப்பம் பச்சைவாழியம்மன் கோவில் அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள், ஏரியில் ஆழம் அதிகமாக உள்ளது. எனவே ஏரிக்குள் இறங்க கூடாது என்று கூறினர். உடனே 2 பேரும், ஏரிக்கரையில் நின்றபடி விநாயகர் சிலைகளை கரைத்தனர். அப்போது அவர்களுக்கு ஏரியில் குளிக்க ஆசை ஏற்பட்டது.

எனவே 2 பேரும் அங்கிருந்து 50 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்று, பொதுமக்கள் இல்லாத இடத்தில் ஏரியில் இறங்கி குளித்தனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் ரே‌ஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிக் கொண்டு வந்த தொழிலாளர்கள், பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், லாரியை நிறுத்திவிட்டு ஏரிக்கு சென்றனர். அதற்குள் மாணவர்கள் அஜித்குமார், மணிகண்டன் ஆகியோர் ஏரியில் மூழ்கினர். இருப்பினும் தொழிலாளர்கள் ஏரிக்குள் இறங்கி 2 பேரையும் மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அஜித்குமாரும், மணிகண்டனும் இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இதனிடையே கைக்கிளார்குப்பம் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நெய்வேலி– மந்தாரக்குப்பம் சாலையில் உள்ள என்.எல்.சி. மத்திய கிடங்கு முன்பு ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் (தெர்மல்) சீனிவாசன், (டவுன்ஷிப்) ரவீந்திரராஜ் மற்றும் என்.எல்.சி. பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில், என்.எல்.சி. புதிய அனல்மின் நிலைய பணிக்காக இந்த ஏரியில் இருந்து அதிகளவு மண் அள்ளப்பட்டது. இதனால் இந்த ஏரி தற்போது 30 அடி ஆழம் உள்ளது. இது பற்றி முன்கூட்டியே அதிகாரிகளிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ஏரிக்கரையில் வேலி அமைக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை வேலி அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்து விட்டார்கள். எனவே உடனடியாக ஏரிக்கரையில் வேலி அமைக்க வேண்டும். உயிரிழந்த மாணவர்கள் அஜித்குமார், மணிகண்டன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என்.எல்.சி. நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார் இது தொடர்பாக என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறினர். அதன்படி கிராம மக்கள், என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். இந்த பேச்சுவார்த்தை இரவு 10.30 மணியை கடந்தும் நீடித்தது. அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சம்பவம் பற்றி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story