மத்திய அரசுக்கு கவர்னர் கடிதம் 7 பேர் விடுதலையில் பா.ஜனதா அரசு தயக்கம் காட்டுகிறது - திருமாவளவன் பேட்டி


மத்திய அரசுக்கு கவர்னர் கடிதம் 7 பேர் விடுதலையில் பா.ஜனதா அரசு தயக்கம் காட்டுகிறது - திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 16 Sept 2018 4:45 AM IST (Updated: 16 Sept 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு கவர்னர் கடிதம் அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாகவும், 7 பேர் விடுதலையில் மத்திய பா.ஜனதா அரசு தயக்கம் காட்டி வருவதாகவும் திருமாவளவன் கூறினார்.

கோவை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசியலமைப்பு சட்டத்தின்படி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கலாம் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வி‌ஷயத்தில் கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிய பின்னரும், கவர்னர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்?. இதுதொடர்பாக கவர்னரை தமிழக அரசு சந்தித்து 7 பேரையும் விடுதலை செய்ய முறையிட வேண்டும்.

7 பேரின் விடுதலையில் மத்திய பா.ஜனதா அரசு தயக்கம் காட்டி வருகிறது. மத்தியில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சிக்கு வந்தால் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எண்ணம் இருந்த நிலையில், தற்போது உண்மைநிலை வேறாக உள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடு தப்பி சென்றவர்கள் பற்றி ரகுராம் ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் இதுவரை வாய்திறக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 15 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் இந்த ஆட்சியில் மட்டும் வழங்கவில்லை என்றாலும், 80 சதவீதம் வராக்கடன் பா.ஜனதா தலைமையிலான ஆட்சியில் வழங்கப்பட்டு உள்ளதால் பிரதமர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். கல்வி கடன், விவசாய கடன் வி‌ஷயத்தில் கடுமை காட்டி வரும் மத்திய அரசு, வங்கிகளை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளிநாடு தப்பி சென்றவர்கள் வி‌ஷயத்தில் அமைதியாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இஸ்லாமியர் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கும் மின்தடை தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. நிலக்கரி மட்டுமின்றி நீட் தேர்வு, ஒகி புயல் நிவாரண நிதி, தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி நிதி என பல்வேறு விவகாரங்களுக்கு மத்திய அரசிற்கு முதல்–அமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். இருந்தபோதும் மத்திய அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. ஆனால், மத்திய அரசின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட்ட அரசாக மாநில அரசு உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் சி.பி.ஐ. சோதனை அதிகமாக நடக்கிறது. சோதனை நடைபெறுகிறது என்பதால் குற்றவாளி என்றாகாது என்றாலும் அரசை அச்சுறுத்துகிறார்கள். அல்லது மக்கள் மீது அக்கட்சியின் மதிப்பை குறைக்கவே இதுபோன்ற சோதனைகள் நடைபெறுகிறது. இருப்பினும், புகாருக்குள்ளான அமைச்சர், டி.ஜி.பி. மீது முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கியிருப்பது வியப்பை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story