காட்டிக்கொடுத்து விடுவார் என பயந்து குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சி பதவி - துரைமுருகன் பேட்டி
அனைவரையும் காட்டிக்கொடுத்து விடுவார் என பயந்து, குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
கோவை,
ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை வந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:–
கேள்வி: தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகரித்து விட்டதே?
பதில்: தமிழகத்தில் மின்தடையே இருக்காது என்று ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொரு அமைச்சர் நிலக்கரி பற்றாக்குறையாக இருக்கிறது, அதை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் அமர்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசி தெளிவாக முடிவெடுத்து பின்னர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
கேள்வி: குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?.
பதில்: பதவி கொடுக்க வில்லை என்றால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தால்தான் அவருக்கு கட்சியில் இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
கேள்வி: இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே?
பதில்: அது பற்றி எனக்கு தெரியாது.
கேள்வி: ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே?
பதில்: தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் கார் மூலம் ஈரோடு புறப்பட்டு சென்றார்.