காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 11:45 PM GMT (Updated: 15 Sep 2018 8:41 PM GMT)

காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

திருவொற்றியூர், 

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்தமுறை சென்னை போலீசார், விநாயகர் சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தனர்.

சென்னையில் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 5 நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, சிலைகளை கடலில் கரைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை உள்ள பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்கரையில் கரைக்கப்பட உள்ளன.

கடலில் கரைப்பு

நேற்று 3 அடி முதல் 10 அடி உயரமுள்ள பல்வேறு விதமான 27 விநாயகர் சிலைகள் மேள, தாளம் முழங்க டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக காசிமேடு கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டு ராட்சத கிரேன் மூலம் தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

அதேபோன்று திருவொற்றியூர் பகுதியில் 104 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பகுதியில் 15 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மேலும் புழல், காவாங்கரை, மணலி புதுநகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிலைகள் எண்ணூர் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடலில் கரைக்கப்பட்டன.

இன்று....

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 280 விநாயகர் சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்கரையில் கரைக்கப்பட உள்ளன. இதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சிலைகள் கரைக்கும் இடங்களில் போலீசார் மூலம் கிரேன் கள் மற்றும் மருத்துவ குழுக்கள் வசதி செய்யப்பட்டுள்ளன.

புளியந்தோப்பு

சென்னை புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ், திரு.வி.க. நகர், பெரவள்ளூர், வியாசர்பாடி உள்ளிட்ட 9 போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 230 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுக்கு போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கினார்.

நேற்று ஒரு சில விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. மீதம் உள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் இன்று (ஞாயிற்றுகிழமை) கடலில் கரைக்கப்படுகிறது. இதற்காக உள்ளூர் போலீசார், ஆயுதபடை போலீசார், ஊர்காவல் படையினர் என மொத்தம் 550 பேர் புளியந்தோப்பு சரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story