ஓசூரில் காரில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர் விஷ வாயு தாக்கியதா? போலீசார் விசாரணை


ஓசூரில் காரில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர் விஷ வாயு தாக்கியதா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் காரில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். அவர் விஷ வாயு தாக்கி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் உள்ள ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத். இவரது மகன் ரக்சித் (வயது 20). இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காரில் வெளியே சென்ற ரக்சித்திற்கு, தந்தை ஹரிநாத் போன் செய்தார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. கார் எங்கு உள்ளது என்பதை ஜி.பி.எஸ். கருவி மூலம் பார்த்த போது, ரிங்ரோட்டில் உள்ள கார் ஷோரூம் அருகே, நீண்ட நேரமாக கார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து ஹரிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்றனர். அங்கு காரில் மயங்கிய நிலையில், டிரைவர் சீட்டில் ரக்சித் அமர்ந்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிநாத் மற்றும் உறவினர்கள், கார் கண்ணாடியை உடைத்து, ரக்சித்தை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரக்சித் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

ரக்சித் ஓட்டி சென்ற காரில், கார்பன் மோனாக்சைடு சிலிண்டர் இருந்துள்ளது. இதனால் சிலிண்டரில் கியாஸ் கசிந்து, விஷ வாயு தாக்கியதில் மாணவர் ரக்சித் மயக்கம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தான், உண்மையான காரணம் தெரியவரும் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் விஷவாயு தாக்கி இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story