விஜய் மல்லையா-அருண் ஜெட்லி சந்திப்பு விவகாரம்: உண்மை நிலை குறித்து ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்


விஜய் மல்லையா-அருண் ஜெட்லி சந்திப்பு விவகாரம்: உண்மை நிலை குறித்து ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:00 PM GMT (Updated: 15 Sep 2018 9:47 PM GMT)

விஜய் மல்லையா-அருண் ஜெட்லி சந்திப்பு குறித்த விவகாரத்தில் உண்மை நிலையை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி, 

விஜய் மல்லையா-அருண் ஜெட்லி சந்திப்பு குறித்த விவகாரத்தில் உண்மை நிலையை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று காலையில் தூத்துக்குடி வந்தார். அவர் மில்லர்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நீர் மேலாண்மை

தமிழகத்தில் போதிய மழை பெய்தும், பல இடங்களில் வறட்சி காணப்படுகிறது. இதற்கு காரணம் தண்ணீர் சேமிப்பு இல்லை என்பது தான். நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரும் காலங்களில் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை ஏற்படுத்தி ஆக்கப்பூர்வமான முறையில் தண்ணீர் சேமிக்கக்கூடிய நிலையை அரசு உருவாக்க வேண்டும். அப்போது தான் தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் வறட்சியில் இருந்து மீளமுடியும். மேட்டூர் அணை 2 முறை நிரம்பியும் டெல்டா மாவட்டங்களில் கடைமடைக்கு தண்ணீர் போகவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்

குட்கா ஊழலை பொறுத்தவரை ஒருபுறம் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் எனவும் மறுபுறம் தொழில் அதிபர்கள், அதிகாரிகள் எனவும் சோதனைக்குள்ளாகிறார்கள். இப்படி இருக்கும்போது ஒரு காலக்கெடுக்குள் உண்மை நிலை தெரிய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். முன்பு நடந்த பல சோதனைகள் போல் முடிவு இல்லாமல் இருந்தால், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

விஜய் மல்லையா-அருண்ஜெட்லி சந்திப்பின் உண்மை நிலை வெளிவர வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதனை ஆட்சியாளர்கள் முறையாக விளக்க வேண்டும்.

கூட்டணி

தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

தற்போது தனித்தன்மையுடன் த.மா.கா. செயல்பட்டு வருகிறது. நாங்கள் எங்களை சரியான முறையில் பலப்படுத்தி கொண்டு இருக்கிறோம். அதன் அடிப்படையில் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story