காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை சேவை இயக்க பிரசாரம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்


காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை சேவை இயக்க பிரசாரம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Sept 2018 5:00 AM IST (Updated: 16 Sept 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின் பிரசாரத்தை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.

தேனி,

மத்திய அரசு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக செப்டம்பர் 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை ‘தூய்மையே உண்மையான சேவை இயக்கம்’ நடத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூய்மையே உண்மையான சேவை இயக்கத்தின் பிரசாரம் தொடக்க விழா, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 4-ம் ஆண்டு தொடக்க விழா தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சியில் அம்மா பூங்காவில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், தூய்மையே உண்மையான சேவை இயக்கம் குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக தூய்மையே உண்மையான சேவை இயக்க(2018) பிரசாரம் அக்டோபர் 2-ந்தேதி வரை நடக்கிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வடிகால் வாய்க்கால் சுத்தப்படுத்துதல், பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் பேரணி, சுகாதார களப்பணியாளர்கள் மூலம் சுகாதார நிலைத்தன்மை நிலைநிறுத்திட விழிப்புணர்வு கூட்டம், வட்டார அளவிலான சுகாதார மருத்துவ முகாம் நடத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

கழிப்பிடம் பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு அளித்தல், நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், தெருக்களில் உள்ள சிறுபாலங்களை தூய்மைபடுத்துதல், தேவையின் அடிப்படையில் புதிய பெண்கள், ஆண்கள் சுகாதார வளாகங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் கட்டுமான பணிகள் தொடங்குதல், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுகாதார பணிகளில் ஈடுபட்ட சிறந்த ஊக்குனர்களை கவுரவித்தல் மற்றும் சுகாதார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், தூய்மையே உண்மையான சேவை இயக்க பிரசாரத்தின் ஒரு பகுதியாக வருகிற 25-ந்தேதி ‘மாஸ் கிளனிங்’ என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் தூய்மை பணிகள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, அனைத்து ஊராட்சிகள், அரசு கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி, பள்ளி வளாகங்கள், ஆரம்ப சுகாதார மையங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்துக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story