நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : கைவிடுவோம் ரசாயன உரங்களை கற்போம் இயற்கை இடுபொருட்களை


நீங்களும் ஆகலாம் இயற்கை விவசாயி : கைவிடுவோம் ரசாயன உரங்களை கற்போம் இயற்கை இடுபொருட்களை
x
தினத்தந்தி 16 Sept 2018 2:16 PM IST (Updated: 16 Sept 2018 2:16 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் பல பகுதிகளில் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் உணவின்றி திண்டாடினர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடந்து உயிரிழந்தனர். அந்த இக்கட்டான நிலையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவது ஒன்றே சிறந்த தீர்வாக கருதப்பட்டது.

ஆனால், இப்போது அந்த நிலை முற்றிலும் தலைகீழாகிவிட்டது. உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவை அடைந்து விட்டோம். அதேசமயம், நாம் உண்ணும் உணவில் விஷம் கலந்து விட்டது. விவசாய நிலங்களில் உள்ள மண்ணெல்லாம் மலடாகி வரு கின்றன. எவ்வளவு உரங் களை கொட்டினாலும் எதிர் பார்த்த விளைச்சல் இல் லை. சத்தற்ற உணவு களை உண்பதால் மக்கள் ஆரோக் கியமற்ற வாழ்க்கை வாழ்கி றார்கள். எது அன்று வரமாக இருந்ததோ அதுவே இன்று சாபமாக மாறிவிட்டது.

துரதிருஷ்டவசமாக, ரசாயன விவசாயத்தின் பாதிப்புகள் குறித்து அறிந்திருந்தும் இயற்கை விவசாயத்துக்கு மாறினால் ஏராளமான சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். குறிப்பாக, குறைவான மகசூல் மட்டுமே கிடைக்கும், களை பிரச்சினை மற்றும் பூச்சி தாக்குதல்களை சமாளிப்பது கடினம்… என பல காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

இதுபோன்ற தடைகளை எல்லாம் தாண்டி இயற்கை விவசாயத்தை முறைப்படி செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதற்கு ஏராளமான முன்னோடி இயற்கை விவசாயிகளை சான்றாக காட்ட முடியும். மேலும், இயற்கை விவசாய விளைபொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்புறங்களில் இயற்கை அங்காடிகள் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகின்றன. அதனால், சந்தைப்படுத்துதல் நுட்பங்களை மட்டும் தெரிந்துகொண்டால் போதும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்றுவிடலாம்.

சந்தைப்படுத்துதல் குறித்து அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம். அதற்கு முன்பாக, இயற்கை விவசாயத்தில் காலடி எடுத்து வைக்க விரும்பும் ஒரு விவசாயி முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது இடு பொருட்களை பற்றி தான்!

சரி.. இடுபொருட்கள் என்பவை என்ன?

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக இயற்கை விவசாய முறையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், மூலிகை பூச்சி விரட்டிகள், வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகளை தான் நாம் இடுபொருட்கள் என குறிப்பிடுகிறோம்.

நாட்டு மாடுகள் மட்டும் வைத்திருந்தால் போதும். நமக்கு தேவையான இடுபொருட் களை நாமே தயாரித்து கொள்ள முடியும். இயற்கை விவசாயிக்கு வெளியில் இருந்து காசு கொடுத்து எந்த இடு பொருளும் வாங்க வேண்டிய தேவை யிருக்காது. அதனால் இயற்கை விவசாயத்தில் இடுபொருள் செலவு என்ற ஒன்றே கிடையாது.

இதை கருத்தில் கொண்டு இடுபொருள் தயாரிப்பு பயிற்சி வகுப்புகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது ஈஷா விவசாய இயக்கம்.

இதுகுறித்து ஈஷா விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா கூறுகையில், “ ‘இயற்கை விவசாயத்தின் நுழைவு வாயில்’ங்கிற பேருல இடுபொருள் தயாரிப்பு பயிற்சியை தமிழகம் முழுக்க நடத்திட்டு வர்றோம். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு மாவட்டத் துல நடத்துறோம். அந்தப் பயிற்சியில ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம், மீன்அமிலம், மூங்கில் ஈயம், பழ ஈயம், பத்து இலை கசாயம், அக்கினி அஸ்திரம், நீம் அஸ்திரம், வேப்பங்கொட்டை கரைசல், தேமோர் கரைசல், அரப்புமோர் கரைசல்னு மொத்தம் 12 வகையான இடுபொருட்களை எப்படி தயாரிக்குறதுனு சொல்லி கொடுக்குறோம்.

பயிற்சிக்கு வர்ற விவசாயிங்களை அவங்க கையாலயே இடுபொருள் தயாரிக்க வைப்போம். இதனால, அது அவங்களுக்கு அனுபவப் பூர்வமாக சுலபமாக மனசுல பதிஞ்சுரும். அந்த பயிற்சில இடுபொருள் தயாரிப்பு மட்டுமில்லாம ரசாயன விவசாயம் பண்ணிக்கிட்டு இருந்த நிலத்த எப்படி இயற்கை விவசாயத்துக்கு மாத்துறது என்றும் சொல்லி கொடுக்குறோம்.

தமிழகத்துல இதுவரைக்கும் 2,000 விவசாயிகளுக்கு மேல சொல்லி கொடுத்துருக்கோம். அதுல நிறைய விவசாயிங்க இயற்கை விவசாயத்துக்கு முழுசா மாறியிருக்காங்க. இதோட அடுத்தக்கட்டமா அந்தந்த மாவட்டங்கள்ல இருக்குற முன்னோடி விவசாயிகளே அவங்க ஊர்ல இருக்குற மத்த விவசாயிங்களுக்கு இடுபொருள் பயிற்சியை நடத்துறதுக்காக அவங்களுக்கு சொல்லிதர்றோம். இது மூலமா தமிழ்நாடு முழுக்க நிறைய பயிற்சியாளர்களை உருவாக்க முடிவு பண்ணிருக்கோம்” என்றார்.

(இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் பெறவும் பயிற்சி வகுப்பில் பங்கேற்கவும் agro@ishaoutreach.org என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

- தொடரும்.

இயற்கை இடுபொருட்களால் கிடைக்கும் பயன்கள்:

* இயற்கை இடுபொருட்களால் மண்ணின் இறுக்கத் தன்மை குறைந்து மண் புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மண் வளம் மேம்படும். நன்மை செய் யும் பூச்சிகள் தோட்டத்தை நோக்கி அதிகம் வரும்.

* ரசாயன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லிகளால் தீமை செய்யும் பூச்சிகளுடன் சேர்த்து நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. ஆனால், இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி விரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் தான் விரட்டும். நன்மை செய்யும் பூச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

* ரசாயன மருந்துகளை அடிப்பதால் மண் வளம் கெடுகிறது. பயிர்கள் விஷமாகின்றன. பூச்சி மருந்தை அடிக்கும் மனிதர்களுக்கும் சுவாச கோ ளாறு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால், இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினால் அத்தகைய பிரச்சினைகள் ஏற்படாது.

* இயற்கை விவசாயம் என்பது ஒரு தற்சார்ப்பு விவசாயம். அதனால், விவசாயி இடுபொருட் களுக் காக யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாட்டு மாடு இருந்தால் போதும் 30 ஏக்கர் வரை இயற்கை விவசாயம் செய்துவிடலாம்.

* இயற்கை விவசாயத்தில் தோராயமாக நான்கைந்து ஆண்டுகள் இடுபொருட்களை பயன்படுத்தினால் போதும். அதன்பிறகு இடுப்பொருட்கள் கொடுக்கா விட்டாலும் நிலத்தில் போதிய விளைச்சல் தானாக கிடைக்கும். ஆனால், ரசாயன விவசாயத்தில் இது சாத்தியமில்லை. ரசாயனத்தை தொடர்ந்து கொடுத்துகொண்டே இருந்தால் தான் விளைச்சல் பார்க்க முடியும். மேலும், இந்த ரசாயனங்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேசமயம் விளைச்சல் குறைந்துகொண்டே செல்கிறது.

* நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் பேரூட்ட சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கு இடுபொருட்கள் உதவி செய்கின்றன.

* பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும். பயிர்களில் விஷம் இருக்காது. பழங்கள் மற்றும் காய்கறிகளில் சுவையும் சத்தும் நிறைந்து இருக்கும்.

* விவசாயி தனது தோட்டத்தில் அனைத்து வகையான இடுபொருட்களையும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. பயிர்களை பொறுத்து 3 அல்லது 4 வகையான இடுபொருட்களை பயன்படுத்தினாலே போதுமானதாகும்.


Next Story