கட்டிப் பிடித்தலைப் போன்று இது கரம் பற்றுதல் : பரவி வரும் புது பழக்கம்


கட்டிப் பிடித்தலைப் போன்று இது கரம் பற்றுதல் : பரவி வரும் புது பழக்கம்
x
தினத்தந்தி 16 Sep 2018 9:02 AM GMT (Updated: 16 Sep 2018 9:02 AM GMT)

‘குழந்தைகளிடம் சமீப காலங்களில் நாம் பேசும் விஷயங்கள் அவர்களின் நம்பிக்கையை குறைத்து, அவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நல்ல தொடுதலையும், கெட்ட தொடுதலையும் அவர்களிடம் திரும்பத் திரும்பக்கூறிக் கொண்டிருப்பதால், தங்களை யார் தொட்டாலும் சந்தேகம் கொள்கிறார்கள். சமூகத்தையும், சக மனிதர்களையும் அவநம்பிக்கையோடு பார்க்கிறார்கள். குழந்தைகள் எல்லோரையும், எப்போதும் சந்தேக கண்களோடு நோக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவர்களுக்கு மனிதர்கள் மீதான நம்பிக்கை குறைவதால், மகிழ்ச்சியும் குறைகிறது. அதனால் ‘சந்தேகத்தை கைவிடுங்கள். சகமனிதர்களை நம்புங்கள். சுயநலத்தில் இருந்துவிடுபட்டு மகிழ்ச்சியாக வாழுங்கள். மகிழ்ச்சியாக வாழும் ஒவ்வொரு மனிதரும் வெற்றியாளர்கள்தான்’ என்று நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம்’’ என்று சொல்கிறார், சமூக சேவகி அல்லிராணி.  இவர், மக்களிடம் நம்பிக்கை உணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்க ஒவ்வொருவரையும் கரம்பற்ற சொல்கிறார்.

‘‘நேருக்கு நேர் சந்திக்கும்போது ‘ஹலோ’ சொல்வதைவிடவும், நீண்ட நேரம் பேசி நலம் விசாரிப்பதைவிடவும், அவர்களது கரத்தை சற்று நேரம் கோர்த்துப்பிடிப்பதே சிறந்தது. அதன் மூலம் அவருக்கு புதிய சக்தி கிடைக்கும். தன்னம்பிக்கையோடு அவர்கள் செயல்படத் தொடங்கி விடுவார்கள். கட்டிப்பிடிப் பதைவிட இது அதிக சக்தியைதரும்..’’ என்று விளக்கும் அல்லிராணி, ‘கரம்பற்றுதல்’ என்ற புதிய உணர்வுபங்கீட்டு முறையை மக்களிடம் அறிமுகப்படுத்திவருகிறார். சமூக சேவகியான இவர் பேசும் இடங்களில் எல்லாம், இறுதியில் மக்களை கைகோர்க்கவைத்து புதிய நம்பிக்கையை பாய்ச்சிக்கொண்டிருக்கிறார்.

‘‘பாசமும், பண்பும், பாதுகாப்பும் கொண்ட கைகோர்த்தலில் ஆண், பெண் என்ற பேதத்திற்கு இடமில்லை. சக மனிதர் என்ற அன்புதான் அதில் மேலோங்கி நிற்கும். இந்த கரம்பற்றுதலால் மக்களிடம் இருக்கும் இடைவெளி குறைந்து, மனங்கள் உறவாடும் மாண்புமிகுந்த நிலை உருவாகியிருக்கிறது’’ என்று விளக்கமும் தருகிறார்.

அல்லிராணி திருச்சி தில்லைநகரைச் சேர்ந்தவர். இவரது கணவர் பாலாஜி. பாரம்பரியமான விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களது ஒரே மகள் ஆஷிகா பாலாஜி படித்து முடித்து லண்டனில் பணிபுரிகிறார்.

அல்லிராணி தன்னை சமூக சேவைக்கு தயார்படுத்திக் கொண்ட விதத்தை சொல்கிறார்:

‘‘குடும்பத்தலைவியான நான் முதலில் ரோட்டரி சங்கத்தில் என்னை இணைத்துக்கொண்டு, அதில் குழந்தைகள் மேம்பாட்டு பிரிவு தலைவராக இருந்து செயல்படத் தொடங்கினேன். அப்போது அவர்களிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கினேன். இப்போது அந்த சங்கத்தின் இளைஞர் பாதுகாப்பு தலைவராக பணியாற்றி வருகிறேன். இது தவிர புத்தக வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவது, தூய்மைப் பணி, சுகாதாரப் பணி, திருச்சி தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பணி.. என்பன போன்ற ஏராளமான சமூகப் பணிகளை செய்து வருகிறேன். திருச்சியில் பாய்ந்தோடும் காவிரியில் மாசு ஏற்படுவதை தடுக்க, ‘காக்க... காக்க... காவிரியை காக்க’ என்ற கோஷத்துடன் இளைஞர்களின் உதவி யுடன் காவிரியில் தூய்மை பணிகளையும் மேற்கொண்டோம். காவிரி கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதை தடுக்க அங்கு வருபவர்களுக்கு துணிப்பை வினியோகம் செய்தோம். அதோடு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையையும் எடுத்துரைத் தோம். அதன் பின்பு ‘யுகா’ என்ற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் சமூக சேவை செய்து வருகிறேன்.

இப்போது நாம் குழந்தைகளை வளர்க்கும்முறை சிறப்பாக இல்லை. அவர்களிடம் நாம் நம்பிக்கையை விதைப்பதில்லை. அவர்களை சுயநலமிக்கவர்களாக வளர்க்கிறோம். அவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கவேண்டிய நாமும், சுயநலமாகவே வாழ்கிறோம். குழந்தைகளுக்கும்-பெற்றோர்களுக்கும் இடையே புரிதலும், பகிர்தலும் இல்லாமல் இருப்பதால்தான், அவர்கள் பாலியல் பாதிப்பு போன்ற சமூக சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளிடம் நாம் மனம்விட்டு பேச ஆரம்பித்துவிட்டால், எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

அதை நாம் செய்ய தவறியதால்தான் இன்று மனநல மருத்து வமனைகள் பெருகிவிட்டன. வருட கணக்கில் மருத்துவம் பார்த்தும் குணமாக முடியாத நிலைக்கு பலர் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்றவேண்டும் என்றால் இளைஞர்கள், குழந்தைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சக மனிதர்கள் மீது நம்பிக்கையையும், தோழமை உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று, சக மனிதர்களுக்காக உங்கள் சுட்டுவிரலை நீட்டுங்கள். மனிதம் நமக்குள் மலரும். தன்னம்பிக்கை உருவாகும். அதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். பணம், பதவி, பொருள் எல்லாம் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். பந்தம், பாசம், அன்பு, நேசத்திற்குதான் முன்னுரிமை கொடுக்கவேண்டும்’’ என்று கூறும் அல்லிராணி, தன்னை பாதித்த விஷயம் ஒன்றையும் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘எனது பள்ளி தோழி மிகவும் அழகானவள். நாங்கள் வருங்காலத்தில் என்னவாகவேண்டும் என்று ஆளுக்கொரு கனவில் மிதந்துகொண்டிருந்தோம். அப்போது அவள் ஒரு தேர்வில் தோல்வி அடைந்து விட்டாள். அதற்காக தனது உயிரையே மாய்த்துக்கொண்டாள். அவள் தனது தோல்வியை சக தோழிகள், தாய், தந்தை, உறவினர்கள் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தால், அந்த மிக மோசமான முடிவை எடுத்திருக்கமாட்டாள். அந்த அழகுத் தேவதையை நாங்கள் இழந்துவிட்டோம்.

எனது தோழிக்கு ஏற்பட்ட நிலைமை, அவளை போன்ற எந்த பள்ளிக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. அதற்காக நாம் குழந்தைகளிடம் பேச வேண்டும். பழக வேண்டும். அவர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். தோல்வி தான் வாழ்க்கை அல்ல என்பதை புரிய வைத்து அவர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அன்புகாட்டி அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டும். அதை கருத்தில் கொண்டுதான் நான் இப்போது பள்ளி, கல்லூரிகளை தேர்வு செய்து மாணவர்களை கரம் கோர்க்கச் சொல்கிறேன். நான் செல்லும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒருவரது கையை மற்றொருவர் பிடித்துக்கொள்ள செய்வேன். அது நம்மிடையே நல்ல புரிதலையும், நேசத்தையும், தோழ மையையும், அன்பையும் உருவாக்கும்.

ஒருவரை பார்த்து ‘ஹலோ’ என வணக்கம் வைப்பதற்கும், அந்த நபரை பார்த்து கைகுலுக்குவதற்கும் நிறைய வித்தி யாசங்கள் இருக்கின்றன. ஒருவரது கையை பிடித்து வாழ்த்து சொல்லும் போது நமது உள்மனதில் ஒரு பந்தம், பாசம் ஏற்பட்டு விடும். அதை வாழ்க்கையில் எல்லோருமே அனுபவித்தி ருப்பார்கள். எனவே ஒருவரை பார்த்து சாதாரணமாக ‘ஹலோ’ என்ற சொல்லோடு நிற்காமல் கைகுலுக்குங்கள். கரம்பற்றுங்கள். அதன் மூலம் உங்கள் நட்பு வட்டம் இன்னும் விரிவடையும். நல்ல புரிதலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதன் வழியாக சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் மலரும்’’ என்கிறார்.

அல்லிராணி பள்ளியில் படிக்கும்போது சாரணர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அப்போது சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டு, டெல்லியில் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமனிடம் இருந்து விருதும் பெற்றிருக்கிறார். சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், ‘கரம்பற்றுதல்’ மூலம் மக்களிடம் புது நம்பிக்கையை பாய்ச்சி வருகிறார். 

Next Story