உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 16 Sep 2018 12:09 PM GMT (Updated: 16 Sep 2018 12:09 PM GMT)

இருபத்தாறு வயதான அந்த பெண்ணுக்கும், இருபத்தெட்டு வயதான இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இளைஞன் அரசியல் பின்னணிகொண்ட குடும்பத்தை சேர்ந்தவன்.

அவள் வீட்டிற்கு ஒரே பெண். அழகானவள். அதிகம் படித்து, வட மாநிலம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தவள். அவள் வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்தபோது திருமணம் பேசி முடிக்கப் பட்டது.

அந்த இளைஞனின் தாயார், புதிதாக அறிமுகமாகும் ஒவ்வொருவரையும் உற்றுக்கவனித்து, அவர்களது இயல்பை மதிப்பீடு செய்யக் கூடியவர். அவர், நிச்சயதார்த்தத்தி்ற்கு முன்பு ஒருமுறையும், நிச்சயதார்த்தத்தின்போதும் தனது வருங்கால மருமகளை ஆழ்ந்து கவனித்தார். அவள் மனப்பூர்வமாக ‘திருமணத்திற்கு சம்மதம்’ என்று சொன்னபோதும், அவளுக்குள் இனம்புரியாத பயம் படர்ந்து கிடப்பதை அந்த பெண்மணியின் உள்ளுணர்வு உணர்த்தியது. அதை மகனிடம் சொன்னால் குழம்பிப்போவான் என்பதால் அவரே, அவளை தனிமையில் சந்தித்து பயத்துக்கான காரணத்தை அறிய விரும்பினார்.

அவரது பெண் தோழிகள் சந்திக்கும் கூட்டம், ஓட்டல் ஒன்றில் நடந்தபோது அங்கு வந்து தன்னை சந்திக்கும்படி கூறினார். யாரிடமும் தகவல் சொல்லாமல் தனியாக வரும்படியும் சொன்னார். அவளும் வந்தாள். சிறிது நேரம் அமைதியாக உட்கார வைத்து காபி கொடுத்து உபசரித்து, குடும்ப கதைகளை எல்லாம் பேசிவிட்டு விஷயத்திற்கு வந்தவர், ‘உன் மனதுக்குள் ஏதோ பயமும், கவலையும் குடிகொண்டிருக்கிறது. அந்த கவலையோடு நீ கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பது உனக்கும் நல்லதில்லை. எங்களுக்கும் நல்லதில்லை. அதனால் என்னை உன் தாயார் ஸ்தானத்தில் வைத்து, உன்னை பயப்படுத்திக் கொண்டிருக்கும் விஷயத் தை சொல். உனக்கு எந்த பாதிப்பும் வராது. உன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீ உண்மையை சொல்வதே நல்லது’ என்று தன்னம்பிக்கையூட்டினார்.

உடனே அவளுக்கு கட்டு்ப்படுத்த முடியாத அளவுக்கு அழுகை வந்தது. அந்த பெண்மணியை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறியபடியே, அதிர்ச்சிகரமான அந்த உண்மையை சொன்னாள். ‘இனிமேல் அந்த தவறில் எதையும் செய்யமாட்டேன்’ என்று உறுதிகூறி கண்ணீர்விட்டாள்.

அந்த பெண்மணி கண்ணீரைத் துடைத்து ஆறுதலும், தேறுதலும் அளித்து தனக்கு மிகவும் வேண்டியவரான சைக்காலஜிஸ்ட் ஒருவரிடம் அவளை அழைத்துச்சென்றார். அவரிடம், அவளது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மைகளை கூறி ‘இத்தனையும் நடந்த பின்பும் இவள்தான் என் வருங்கால மருமகள். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவளது தோழி பணத்துக்காக இவளுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்திருக்கிறாள். திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. அதற்குள் அவளுக்குள் இருக்கும் குற்ற உணர்வு, பயம், கவலை எல்லாவற்றையும் தீர்த்துவைத்து, தன்னம்பிக்கையூட்டி மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு இவளை தயார்ப்படுத்துங்கள். இவள் உங்களிடம் சிகிச்சை பெறும் விஷயம் என் கணவர், மகன் உள்பட யாருக்கும் தெரியவேண்டாம்’ என்றார்.

இந்த வித்தியாசமான மாமியாரை பார்த்து நெகிழ்ந்துபோன சைக்காலஜிஸ்ட் சிகிச்சையை தொடங்கியிருக்கிறார்.

அந்த பெண் நம்பிக்கைத் துரோகத்தில் சிக்கி எப்படி பாதிக்கப்பட்டாள் தெரியுமா?

பெற்றோரின் ஒரே மகளான அவள், படித்து முடித்து வேலை கிடைத்ததும் குடும்பத்தை பிரிந்து வேறு மாநிலத்திற்கு பணிக்கு சென்றிருக்கிறாள். குடும்பத்தை பிரிந்த தனிமை அவளுக்குள் பெரும் ஏக்கத்தை உருவாக்க, அந்த சூழ்நிலையில் சொந்த மாநிலத்தை சேர்ந்த தோழி ஒருத்தி அவளுக்கு அறிமுகமாகியிருக்கிறாள். அவள் மூலம் மதுப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு நண்பன் ஒருவனையும் இவளே அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். அவனோடு வெளியே செல்லவும் தூண்டியிருக்கிறாள். அப்போது மது போதையில் எல்லைமீறி, படம் பிடிக்கப்பட்டிருக்கிறாள். பின்பு அதைவைத்து அந்த இளைஞனும், பெண்ணும் சேர்ந்து இவளை ‘பிளாக்மெயில்’ செய்திருக்கிறார்கள். தனது வாழ்க்கை சீரழியப் போவதை உணர்ந்த அவள், வேலையை உதறிவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறாள்.

வெளி மாநிலத்திற்கு வேலைக்கு செல்லும் பெண்கள், தங்களை சுற்றி இத்தகைய விபரீதங்கள் அரங்கேறுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

- உஷாரு வரும். 

Next Story