சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான 74 ஆடுகள் ஒரே இடத்தில் புதைப்பு


சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான 74 ஆடுகள் ஒரே இடத்தில் புதைப்பு
x
தினத்தந்தி 17 Sept 2018 3:30 AM IST (Updated: 16 Sept 2018 6:20 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான 74 ஆடுகளும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள கங்காகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிலரும் தங்கள் ஆடுகளை முருகனிடம் கொடுத்து மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம். இவர் தினமும் இந்த ஆடுகளை அருகில் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகனுக்கு பதில் அவரது மகன் ஜெயக்குமார் 80 ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடுமையான இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஜெயக்குமார் 6 ஆடுகளுடன் வீடு திரும்பி உள்ளார். மற்ற ஆடுகள் மழை பெய்த போது அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. மழை விட்டதும் ஆடுகள் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த முருகன் ஆடுகளை பல இடங்களில் தேடி உள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள கண்ணன் கோவில் அருகில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து கிடந்தது. அதில் ஆடுகள் சிக்கி இறந்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த முருகன் இது குறித்து திருத்தங்கல் போலீசுக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.

போதிய மின் விளக்கு வசதி இல்லாததாலும், அந்த பகுதியில் அதிகஅளவில் மழை நீர் தேங்கி இருந்ததாலும் மீட்புப் பணி நடக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த கட்டிட சுவர் அகற்றப்பட்டது.

அப்போது ஆடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. மொத்தம் 74 ஆடுகள் பலியாகின. அவை அப்புறப்படுத்தப்பட்டன. கால்நடைத்துறை அதிகாரிகள் பார்த்தசாரதி, நந்தகோபால், திருமாறன் ஆகியோர் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்தனர். அப்போது சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா, கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபு ஆகியோர் உடன் இருந்தனர். இறந்து கிடந்த 74 ஆடுகளையும் மதியம் 1 மணிக்கு கங்காகுளம் பகுதியில் ஒரே இடத்தில் குழி தோண்டி புதைத்தனர்..


Next Story