திருச்செந்தூர், வேம்பார் கடலில் 223 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
திருச்செந்தூர், வேம்பார் கடலில் 223 விநாயகர் சிலைகள் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டன.
ஆறுமுகநேரி,
திருச்செந்தூர், வேம்பார் கடலில் 223 விநாயகர் சிலைகள் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி சார்பில் 27-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி விழா கடந்த 10-ந் தேதி முதல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் 11 அடி உயரம் கொண்ட வீர விநாயகர் சிலை வைக்கப்பட்டது. மறுநாள் அந்த சிலை பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெயின் பஜாரில் உள்ள செந்தில்விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அதேபோல் ஆறுமுகநேரியில் உள்ள 25 அம்மன் கோவில்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்து வந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று வீர விநாயகர் சிலைக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வீரவிநாயகர் அலங்கார ரதத்தில் அமர்த்தப்பட்டு 25 அம்மன் கோவில்களுக்கும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
108 சிலைகள்
நேற்று காலையில் செந்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின்னர், 25 அம்மன் கோவில்களில் வைக்கப்பட்டு உள்ள சிலைகள், ஆறுமுகநேரியில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் குரும்பூர், மாவடிப்பண்ணை, நாசரேத் பகுதிகளில் வைக்கப்பட்ட 23 சிலைகள் உள்பட 108 சிலைகள் மதியம் 1 மணிக்கு வீரவிநாயகர் சிலை முன்பு கொண்டு வரப்பட்டன. மதியம் 3 மணிக்கு, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் கிருஷ்ணசிங் தொடங்கி வைத்தார்.
விஜர்சனம்
ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் இந்து முன்னணி வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். நகர இந்து முன்னணி தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் கசமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமஜெயம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா கலந்து கொண்டார்.
இந்த ஊர்வலம் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து புறப்பட்டு, ஜெயின் நகர், பேயன்விளை, ரத்தினபுரி, காயல்பட்டினம் பஸ் நிலையம், பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் கடற்கரையை சென்றது. பின்னர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
கோவில்பட்டி
அகில பாரத இந்து மகாசபா சார்பில் கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 12-ந் தேதி 15 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த சிலைகள் நேற்று காலையில் இனாம் மணியாச்சி பைபாஸ் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இந்த ஊர்வலம் செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு முடிவடைந்தது.
அதன் பின்னர் மதியம் அந்த சிலைகள் அனைத்தும் வேம்பார் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. இதில் ஊர்வலத்தில் மாநில மகளிர் அணி தலைவி சைலஜா, மாநில செயலாளர் வெற்றி வேலாயுத பெருமாள், இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் விஜயக்குமார், துணை தலைவர் நடராஜபாரதி, ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் புதூர், நாகலாபுரம், குளத்தூர், பிள்ளையார்நத்தம், கமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 80 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் நேற்று மாலையில் விளாத்திகுளம் நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் அவைகள் வேம்பார் கடல் மற்றும் சிப்பிகுளம் கடலில் மாலையில் விஜர்சனம் செய்யப்பட்டன.
ஊர்வலத்தை விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு துறவியர் பேரவை மாநில செயலாளர் சுவாமி ராகவானந்தா தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் ராமகாளியப்பன், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கணேசன், வக்கீல் சந்தானகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
இந்து முன்னணி சார்பில் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 20 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் நேற்று காலையில் கயத்தாறு அகிலாண்ட ஈசுவரி அம்மன் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டன. அங்கு இருந்து திருநீலகண்ட ஈசுவரர் ஆலயத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றது. அப்போது ஆஸ்பத்திரி ரோடு, கடம்பூர் சாலையில் கட்டபொம்மன் பள்ளிக்கூடம் வரை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்கள் போலீசாருடன் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலம், பழைய பேரூராட்சி சாலை, வார சந்தை வழியாக கோவிலுக்கு சென்றது. அங்கு ஆலய வழிபாடுக்கு பின்னர் ஊர்வலம் திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
இந்த ஊர்வலத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிகாளை, சங்கரவேல், பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட துணை தலைவர் வக்கீல் நீதிபாண்டியன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர தலைவர் ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story