வெள்ளகோவில் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
வெள்ளகோவில் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் வீடுகளின் மீதும் மரங்கள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 1 மணிக்கு வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 2.15 மணிவரை பெய்தது.
இந்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெள்ளகோவில், மாந்தபுரம், மேட்டுப்பாளையம், முத்தூர் செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் 30–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மாந்தபுரத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் வீடு மீது வேப்பமரம் விழுந்தது. அதேபோல் மேட்டுப்பாளையம் தினகரன் என்பவரது வீட்டின் மீது தென்னை மரம் ஒன்று விழுந்தது. தாமஸ் என்பவர் வீடு மீதும் வேப்ப மரம் ஒன்று விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் வீடுகளின் ஓடுகள் சேதம் அடைந்தன. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்கட்டி மழை பெய்யும் போது, சிறிய கற்கள் விழுவதுபோல் இருந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஒதுக்குப்புறமாக நின்று கொண்டனர். மழை நின்ற பின்னர் புறப்பட்டு சென்றனர். சாலையில் நடந்து சென்றவர்களும் ஆலங்கட்டி மழையின் காரணமாக ஒதுங்கிக்கொண்டனர். ஆலங்கட்டி மழை தரையில் விழுந்ததும் சிறிது நேரத்தில் கரைந்து போனது. அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து ஆலங்கட்டி மழையை பார்த்து ரசித்தனர். இந்த மழையால் வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.