ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழாவில் புகுந்து தாக்குதல் நடத்திய கும்பல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழாவில் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் தொடுத்தது.
ராமநாதபுரம்,
உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ராமநாதபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை விழா நடைபெற்றது. ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர். நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் ஒரு கும்பல் அங்கு வந்தது. யாரும் எதிர்பாராத நிலையில் மேடையில் ஏறி தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேடையில் இருந்த குத்துவிளக்கு, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர்.
இதனால் பெண்களும் மாற்றுத்திறனாளிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த முக்கிய விருந்தினர்களும் வெளியே ஓடினர். இதனால் விழா நடந்த பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கூட்டத்தினை ஒழுங்குபடுத்தினர். பல்வேறு நிறுவனங்கள் பெயரில் பெண்களிடம் ரூ.1,500 வீதம் வசூலித்து ரூ.1 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுவிட்டு தற்போது வேறு பெயரில் கூட்டம் நடத்துவதாக குற்றம்சாட்டி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கூட்டம் நடத்தியவர்கள் இதனை மறுத்தனர். தங்களுக்கும் அந்த நிறுவனங்களுக்கும் தொடர்பில்லை என்றும், திட்டமிட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினர். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்ய உள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட விழாவில் ஏற்பட்ட திடீர் தாக்குதலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.