போலி டிக்கெட் மூலம் விமானத்தில் பயணம்: வட மாநில வாலிபர் கைது


போலி டிக்கெட் மூலம் விமானத்தில் பயணம்: வட மாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2018 4:30 AM IST (Updated: 17 Sept 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

போலி டிக்கெட் மூலம் விமானத்தில் பயணம் செய்து மதுரை வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

அரியானா மாநிலம் பானிபட் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மகன் ரோகித்ரோடியோ (வயது 34). இவர் சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்கு கடந்த 31–ந்தேதி தனியார் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

அதன்படி அவர் நேற்று முன்தினம் மாலையில் விமானம் மூலம் மதுரை வந்தார். இங்கிருந்து பெங்களூரு செல்வதற்காக தான் வைத்திருந்த டிக்கெட்டை விமான நிலைய ஊழியரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி சோதித்து பார்த்தபோது, ரோகித் கொடுத்த டிக்கெட் போலியானது என்பது தெரியவந்தது. இதுபற்றி விமான நிலைய அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து ரோகித்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து வைத்தனர். பின்னர் அவரது மோசடி குறித்த பெருங்குடி போலீசில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரசுராமன் புகார் செய்தார்.

அந்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ரோகித்ரோடியோவை கைது செய்தனர். அவர் எதற்காக போலி டிக்கெட்டில் மதுரை வந்து, இங்கிருந்து பெங்களூரு செல்ல முயன்றார் என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.


Next Story