பாகல்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் கசிவு; சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது


பாகல்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் கசிவு; சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது
x
தினத்தந்தி 16 Sep 2018 10:30 PM GMT (Updated: 16 Sep 2018 9:23 PM GMT)

பாகல்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டு சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் பலியானார்.

பாகல்கோட்டை, 

பாகல்கோட்டை அருகே விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டு சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் பலியானார். ஆனால் அவர் இறந்ததை கூட பொருட்படுத்தாமல் மக்கள் வாளி, குடங்களில் சமையல் எண்ணெயை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேங்கர் லாரி- கன்டெய்னர் லாரி மோதல்

பாகல்கோட்டை மாவட்டம் இலகல் அருகே குனகுண்டா- இலகல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு கன்டெய்னர் லாரியும், டேங்கர் லாரியும் போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றன. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஒரு கார் மீது டேங்கர் லாரி லேசாக உரசியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புதரில் போய் நின்றுவிட்டது.

மேலும் டேங்கர் லாரி முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் டேங்கர் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி அதன் டிரைவர் இறந்துவிட்டார். மேலும் கன்டெய்னர் லாரி டிரைவரும் லேசான காயமடைந்தார்.

சாலையில் ஓடிய சமையல் எண்ணெய்

கன்டெய்னர் லாரி மீது மோதிய வேகத்தில் டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கசிந்து சாலையில் ஆறாக ஓடியது. இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்தனர். அவர்கள் டேங்கர் லாரியில் இருந்து சமையல் எண்ணெய் கசிவதை அறிந்து வீடுகளுக்கு சென்று வாளி, குடங்கள், பிளாஸ்டிக் கேன்களை எடுத்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கிய டிரைவர் நிலை என்ன? என்பதை கூட பொருட்படுத்தாமல் போட்டி போட்டுக்கொண்டு சமையல் எண்ணெயை பிடித்தப்படி இருந்தனர்.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே ரோட்டில் சமையல் எண்ணெய் ஓடியதால், அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 7 பேர் வழுக்கி கீழே விழுந்தனர். இதில் 7 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளும் காயமடைந்தனர்.

முந்திச்செல்ல முயன்றதால் விபத்து

சம்பவம் பற்றி தகவல் அறிந்து இலகல் புறநகர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சமையல் எண்ணெயை பிடிக்க கூடியிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியை பார்த்தனர்.

அப்போது தான் விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் இடிபாடுகளில் சிக்கி இறந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து பல்லாரி நோக்கி டேங்கர் லாரியும், கன்டெய்னர் லாரியும் சென்றதும், இரு லாரிகளும் முந்திச் செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.

போக்குவரத்து சீரானது

அதன் பின்னர் விபத்தில் சிக்கிய டேங்கர், கன்டெய்னர் லாரிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். அதைதொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இலகல்-குனகுண்டா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.

இதுதொடர்பாக இலகல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story