அ.தி.மு.க.வில் கோஷ்டிகள் கிடையாது வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி


அ.தி.மு.க.வில் கோஷ்டிகள் கிடையாது வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 17 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் கோஷ்டிகள் கிடையாது என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,


தஞ்சையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறையின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பரசுராமன் எம்.பி. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை வைத்திலிங்கம் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சந்தனம், குங்குமம், வளையல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணிகளுக்கு 5 வகையான சாதம் பரிமாறப்பட்டது.

இதில் மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் இந்துபாலா, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் ஒருங்கிணைந்த பால்கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், முன்னாள் நிக்கல்சன் வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா நன்றி கூறினார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 2,360 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.

முன்னதாக வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க.வில் கோஷ்டிகள் கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் கோஷ்டிகள் இல்லை. கடைமடைக்கு தண்ணீர் சென்றுவிட்டது. இந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகஅளவில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். 

Next Story