பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் - கலெக்டர் தகவல்


பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Sept 2018 4:30 AM IST (Updated: 17 Sept 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி யெறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

தமிழக அரசால் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்து, ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இதனைச் செயல்படுத்த அனைத்து தரப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், முதல் கட்டமாக கடந்த 15-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், உணவுகளை சுற்ற பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர், சாப்பாடு மேஜை மீது விரிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் தட்டு, தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் ஸ்பூன், பேப்பர் கப், பிளாஸ்டிக் கப், டம்ளர், தெர்மாகோல் கப் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் ஓட்டல்கள், மளிகைக் கடைகள், பேன்சி கடைகள், தள்ளுவண்டி கடைகள், மருந்து கடைகள், இதர பிற நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், பேப்பர் போன்றவை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனைத்தொடர்ந்து பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று அந்த பகுதி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story