திருமணம் செய்ய வற்புறுத்தியதால்: காதலியை கொலை செய்த தனியார் பஸ் கண்டக்டர் கைது


திருமணம் செய்ய வற்புறுத்தியதால்: காதலியை கொலை செய்த தனியார் பஸ் கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2018 3:59 AM IST (Updated: 17 Sept 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி காதலியை கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்ற தனியார் பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்காலில் கடந்த 13-ந் தேதி, 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவரது உடலை வாங்கல் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, முதலில் சந்தேக மரணம் என 174-பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வாய்க்காலில் இறந்து கிடந்தவர், கரூர் மின்னாம்பள்ளி அருகே சங்கரம்பாளையத்தை சேர்ந்த பரமானந்தம் மகள் பேபி (வயது 21) என்பதும், அவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் வாய்க்காலில் தவறி விழுந்து பேபி இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொலை செய்து விட்டு வாய்க்காலில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பேபி, வீட்டில் இருக்கும்போது அடிக்கடி செல்போனில் பேசி கொண்டே இருப்பார். இது தொடர்பாக பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி, காதல் பிரச்சினையில் ஏதும் சிக்கிவிடாதே? என எச்சரித்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பேபியுடன் பழகி வந்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது கரூர்- வாங்கல்- மோகனூர் வழியாக இயக்கப்படும் ஒரு தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி அருகே மேலப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் அன்பரசுவிடம்(22), பேபி நெருங்கி பழகி வந்தது தெரிய வந்தது. அந்த வகையில் அன்பரசுவை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறினார். எனினும் போலீசார் கிடுக்குப்பிடியாக விசாரித்த போது, தான் பேபியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து வாய்க்காலில் வீசி விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கினை கொலை வழக்கமாக மாற்றம் செய்து அன்பரசனை வாங்கல் போலீசார் நேற்று கைது செய்தனர். காதலித்து வந்த போதிலும் பேபியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து அன்பரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியது தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது:-

சம்பவத்தன்று வேலை முடிந்ததும் பேபி தனது காதலன் அன்பரசுவுடன் வாங்கல் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தன்னை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை துணைவியாக ஏற்று கொள்ளுமாறு பேபி வற்புறுத்தினார். ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் என அன்பரசு மறுத்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பேபி, அன்பரசுவிடம் கடும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். காதல் விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடுமே... என அஞ்சிய அன்பரசு கீழே கிடந்த கல்லை எடுத்து பேபியை பலமாக தாக்கினார். இதில் கீழே விழுந்த பேபி மயக்கமடைந்தார். பின்னர் துப்பட்டாவால் பேபியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு அன்பரசு ஓடி விட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அன்பரசுவை நேற்று கரூர் ஜூடிசியல் கோர்ட்டு எண் 2-ன் நீதிபதி சுப்பையா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அன்பரசுவை போலீசார் அடைத்தனர். காதலியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி தனியார் பஸ் கண்டக்டர் கொலை செய்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story