பக்தர்களை கவரும் விநாயகர் சிலைகள் தாராவியில் ‘மெர்சல்’ கணபதி


பக்தர்களை கவரும் விநாயகர் சிலைகள் தாராவியில் ‘மெர்சல்’ கணபதி
x
தினத்தந்தி 17 Sept 2018 5:00 AM IST (Updated: 17 Sept 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விதவிதமான விநாயகர் சிலைகள் பக்தர்களை கவர்ந்து வருகிறது.

மும்பை, 

விநாயகர் சதுர்த்தியையொட்டி மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள விதவிதமான விநாயகர் சிலைகள் பக்தர்களை கவர்ந்து வருகிறது. தாராவியில் ‘மெர்சல்' கணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக சர்வஜனிக் மண்டல்களில் சிவன் விநாயகர், கிருஷ்ண விநாயகர், சூரிய விநாயகர் உள்ளிட்ட இந்து கடவுள்களின் அவதாரங்களிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

இதுபோல விதவிதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பார்த்து தரிசனம் செய்வதற்காக சர்வஜனிக் மண்டல்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஜல்லிக்கட்டு விநாயகர்

மும்பையில் தமிழர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் பகுதிகளில் மாட்டு வண்டியில் அலங்கார சப்பரத்தில் விநாயகர் சிலைகள் நையாண்டி மேளங்கள் முழங்க, ஆட்டம், பாட்டம், கரகாட்டத்துடன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டன.

விநாயகர் சிலைகளும் தமிழர் பண்பாட்டை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.

மும்பை ரே ரோட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் சிறப்பை உணர்த்தும் வகையில் மங்கல மூர்த்தி மித்ர மண்டல் சார்பில் ‘ஜல்லிக்கட்டு' விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அதாவது, ஜல்லிக்கட்டு காளையை விநாயகர் அடக்குவது போல் இந்த சிலை அமைந்து உள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

‘மெர்சல்’ கணபதி

இதேபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் மை தாராவி மித்ர மண்டல் என்ற மண்டலில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஏற்பாட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ‘மெர்சல்’ கணபதி சிலையும் பக்தர்களை வெகுவாக ஈர்த்து உள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தில் அரிவாளை வைத்து கொண்டு நடிகர் விஜய் போஸ் கொடுத்திருப்பார்.

அதேபோல கையில் பெரிய அரிவாளை வைத்து கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் இந்த விநாயகர் சிலை வடிமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. விநாயகருக்கே உரித்தான தொந்தி இல்லாமல் இந்த சிலை கட்டுகோப்பான உடல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையை தாராவியை சேர்ந்த பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

செம்பூரில் தமிழ்க்கடவுளான முருகன் உருவத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

Next Story