தபோல்கர், கல்புர்கி, லங்கேசை கொன்றது ஒரே கும்பல் போலீசார் அதிர்ச்சி தகவல்


தபோல்கர், கல்புர்கி, லங்கேசை கொன்றது ஒரே கும்பல் போலீசார் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 17 Sept 2018 4:40 AM IST (Updated: 17 Sept 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய 3 பேரையும் கொலை செய்தது ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

மும்பை, 

நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய 3 பேரையும் கொலை செய்தது ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள் ளனர்.

ஒரே கும்பல்

புனேயை சேர்ந்த மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கர்நாடகத்தை சேர்ந்த எழுத்தாளர் கல்புர்கியும், கடந்த ஆண்டில் கர்நாடக பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசும் சுட்டுக்கொல்லப்பட் டனர்.

இந்த 3 பேரையும் சுட்டுக் ெகான்றது ஒரே கும்பல் என்று மராட்டிய போலீஸ் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நரேந்திர தபோல்கர் கொலை வழக்கை விசாரித்து வரும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நரேந்திர தபோல்கர், கே.கே. கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் கொலையில் தொடர்புடையது ஒரே கும்பல் தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அனைவரும் சனாதன் சான்ஸ்தான் மற்றும் அதன் கிளை அமைப்பான இந்து ஜன்ஜக்ருதி ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

3 பேரும் இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டதால் அவர்களை கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

10-க்கும் மேற்பட்டோர் கைது

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும் இந்த கொலைகளில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ் ெகாலை வழக்கில் நேரடியாகவோ மறைமுகமா கவோ தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில், கைதான சரத் கலாஷ்கர் தனக்கு நரேந்திர தபோல்கர் கொலையில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

கவுரி லங்கேஷ் கொலையில் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களை நரேந்திர தபோல்கர் கொலையை விசாரித்து வரும் சி.பி.ஐ.போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேபோல் கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே கொலையிலும் பிடிபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story