ஓசூரில் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பு 1,300 போலீசார் பாதுகாப்பு


ஓசூரில் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பு 1,300 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 17 Sept 2018 4:57 AM IST (Updated: 17 Sept 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டன. இதையொட்டி 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டன.

இந்தநிலையில் 3 நாட்கள் கழித்து நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதை முன்னிட்டு பல்வேறு வடிவ விநாயகர் சிலைகளை பக்தர்கள், சரக்கு வேன்கள், ஆட்டோக்கள், டிராக்டர்களில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இதையொட்டி விநாயகர் ஊர்வலம் காந்தி ரோடு, ஏரித்தெரு, நேதாஜி சாலைகள் வழியாக வந்தன. அப்போது இளைஞர்களும், சிறுவர்களும் நடனம் ஆடியபடி வந்தார்கள். மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை, செண்டை மேளங்கள் முழங்க விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

அவ்வாறு எடுத்து வரப்பட்ட சிலைகள் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, ராமநாயக்கன் ஏரி, தர்கா ஏரி, சாந்தபுரம் ஏரிகளில் கரைக்கப்பட்டன. அந்த வகையில் ஓசூரில் டவுன் பகுதியில் 130 சிலைகளும், சிப்காட், அட்கோவில் 120 சிலைகளும் என மொத்தம் 250 சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டதை முன்னிட்டு ஓசூர் நகரில் தாலுகா அலுவலக சாலை, நேதாஜி, எம்.ஜி. சாலைகள், ஏரித்தெரு, தேன்கனிக்கோட்டை சாலை உள்பட முக்கிய இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 29 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஓசூரில் ஒரே நேரத்தில் 250 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டதின் காரணமாக நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

சூளகிரி மற்றும் சுற்று பகுதிகளில், விநாயகர் பண்டிகையை முன்னிட்டு 83 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், 25 சிலைகள் கடந்த 2 நாட்களில் எடுத்துச்செல்லப்பட்டு ஆறு மற்றும் ஏரிகளில் கரைக்கப்பட்டது. நேற்று 38 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு துரை ஏரி, கீரனபள்ளி ஏரி, தென்பெண்ணை ஆறு, மருதாண்டபள்ளி ஏரி ஆகிய இ்டங்களில் கரைக்கப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீதமுள்ள 20 சிலைகள் இன்று (திங்கட்கிழமை) நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளன.

Next Story