எரிந்த நிலையில் ஆண் பிணம்: மனைவி துணையுடன் நண்பரை தீர்த்துக்கட்டியது அம்பலம்
அஞ்சுகிராமம் அருகே எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்த வழக்கில் துப்பு துலங்கியது. மனைவி துணையுடன் நண்பரை தீர்த்துக் கட்டி விட்டு வாலிபர் தலைமறைவானது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அஞ்சுகிராமம்,
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த பொற்றையடி அருகே குளக்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வாலிபர் ஒருவரின் உடல் முழுவதும் பாலித்தீன் கவரால் சுற்றப்பட்டு தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியாமல் இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் கையில் ஆர்யா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
அதைக்கண்ட போலீசார் ஆர்யா என்பது கொலையானவரின் காதலியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இறந்தவர் யார்? என்பதை கண்டறிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
அதில் ஆர்யா என்ற பெயர் கேரளாவில் அதிகம் பயன்படுத்தும் பெயர் என்பதால், கொலையானவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இதுபற்றி கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காமல் இருந்தது.
இந்தநிலையில் கேரள மாநிலம் வலியத்துறையை சேர்ந்த அனுஅஜூ (வயது 27) என்பவர் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவது கேரள தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படையினர் அனு அஜூவை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அனுஅஜூவுடன், பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருவனந்தபுரம் கடினம்குளத்தை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவரை கடந்த 5 மாதங்களாக காணவில்லை என்றும், அவரை அனுஅஜூ எரித்து கொன்று குமரி மாவட்டத்தில் உடலை போட்டு விட்டதாக தனது நண்பர்கள் சிலரிடம் கூறி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொலை செய்யப்பட்டு கிடந்த திருவனந்தபுரம் கடினம்குளத்தை சேர்ந்த ஆகாசும், வலியத்துறையை சேர்ந்த அனுஅஜூவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள்களை திருடி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாலியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களை விற்ற பணத்தை பங்கிடுவதில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது, திருட்டுகள் பற்றி போலீசிடம் காட்டி கொடுத்து விடுவேன் என்று ஆகாஷ் மிரட்டி உள்ளார். அதைத் தொடர்ந்து அனுஅஜூ, ஆகாசை விட்டு பிரிந்து தனியாக திருட்டில் ஈடுபட தொடங்கினார். இதுபற்றிய தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. தன்னை பற்றி ஆகாஷ் தான் போலீசாரிடம் தகவல் கொடுப்பதாக அனுஅஜூ நினைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அனுஅஜூ, ஆகாசை கொன்றுவிட முடிவு செய்தார். இதற்காக தனது மற்றொரு நண்பர் ஜிதின் (22) என்பவரை தன்னுடன் சேர்த்து கொண்டார். மேலும், திருட்டு பற்றி ஆகாஷ் போலீசில் புகார் செய்தால் நாம் அனைவரும் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி அனு அஜூ, தனது குடும்பத்தினரையும் கொலை திட்டத்தில் பங்கேற்க செய்தார்.
அதன்படி கடந்த மார்ச் 30-ந் தேதி அனுஅஜூவின் மனைவி ரேஷ்மா (27) தனது வீட்டிற்கு வரும்படியும், அங்கு மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறி ஆகாஷை வரவழைத்தார். பின்னர், அவரிடம் சமாதானம் பேசுவது போல் நடித்து மதுவில் மயக்க மருந்தை கலந்து குடிக்க செய்தனர். சிறிது நேரத்தில் மயங்கிய அவரை, ரேஷ்மாவின் துப்பட்டாவை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றனர். இந்த கொலையை அனுஅஜூ, அவருடைய தாயார் அல்போன்சா, மனைவி ரேஷ்மா, ஜிதின் ஆகிய 4 பேரும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றினர்.
பின்னர் மறுநாள் (31-ந் தேதி) நள்ளிரவு அனுஅஜூவும், ஜிதினும் பிணத்தை காரில் ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டம் பொற்றையடி அருகே கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அதே காரில் தப்பிச்சென்றுள்ளனர்.
கொலையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அனுஅஜூவும், ஜிதினும் புதிய முறையை கையாண்டனர். அதாவது ஆகாசை கொன்று விட்டு பிணத்தை அருகில் உள்ள ஒர்க்ஷாப்பில் மறைத்து வைத்தனர். பின்னர், தங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சினிமாவில் வருவது போல 4 பேரும் கொல்லம் சென்று தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். உடனே அதை பேஸ்புக்கில் இணைத்து கொல்லத்தில் இருப்பது போல் சாட்சியை ஏற்படுத்தி விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து போலீசார் ரேஷ்மாவையும், அனு அஜூவின் தாயார் அல்போன்சாவையும் கைது செய்தனர். ஏற்கனவே ஜிதின் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மனைவி துணையுடன் நண்பரை தீர்த்துக்கட்டி தலைமறைவான அனுஅஜூவையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அவர் போலீசில் சிக்கினால் கொலைக்கான முழுவிவரமும் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story