பிற கைதிகளால் அச்சுறுத்தல்: வேறு சிறைக்கு மாற்றக்கோரி மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்ட நிர்மலாதேவி
மற்ற கைதிகளால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனவே தன்னை மதுரை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் பேராசிரியை நிர்மலாதேவி முறையிட்டார். மேலும் அவர் குற்றப்பத்திரிகை நகலையும் பெற்றுக்கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி போலீசாரால் கடந்த ஏப்ரல் 16–ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சார்பில் பலமுறை விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட்டிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் (ஆகஸ்டு) 16–ந்தேதி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம், விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தார். 1,160 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது விபசார தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
2–வது மற்றும் இறுதி குற்றப்பத்திரிகையை கடந்த 7–ந் தேதி சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்பையா, கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த குற்றப்பத்திரிகை 200 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.
பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக கடந்த 14–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அன்றைய தினம் நிர்மலாதேவி உள்ளிட்ட 3–பேரையும் ஆஜர்படுத்த கால அவகாசம் கேட்ட நிலையில் மீண்டும் நேற்று ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 3 பேருக்கும் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி முன்னிலையில் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
இதுவரை காவல் நீட்டிப்புக்காக பலமுறை பேராசிரியை நிர்மலாதேவி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது எவ்வித சலனமும் இன்றி இருந்தார். ஆனால் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, தனக்கு மதுரை மத்திய சிறையில் உள்ள பிற கைதிகளால் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும், என முறையிட்டார்.
பேராசிரியை நிர்மலாதேவியின் முறையீட்டை கேட்டுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, இது பற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தார். பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரின் தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை.
இதையடுத்து மீண்டும் அவர்கள் 3 பேரையும் வருகிற 19–ந் தேதி (நாளை) கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் இருந்து போலீசார் அழைத்துச் சென்று மதுரை சிறையில் அடைத்தனர்.