ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது


ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Sept 2018 4:15 AM IST (Updated: 17 Sept 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பெருந்துறை அருகே விஜயமங்கலம் கிளிபாளையம் காலனியை சேர்ந்த மாரன் (வயது 55) என்பவர் தனது குடும்பத்தினருடன் கோரிக்கை மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்கள் மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்துறை ரோட்டிற்கு வந்த அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேன்களை எடுத்தனர். பின்னர் தீக்குளிப்பதற்காக மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றிக்கொள்ள முயன்றனர். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்ததுடன் மண்எண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர்.

அதன்பின்னர் தீக்குளிக்க முயன்ற 4 பேரையும் போலீசார் சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மாரனின் மகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமாகி உள்ளதும், அவரை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அவரிடம் இருந்து மகளை மீட்டுத்தரக்கோரி மாரன், அவருடைய மனைவி சாந்தி (42), மகன் சின்னுசாமி (31), மருமகன் பெருமாள் (34) ஆகியோர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story