ஆதம்பாக்கத்தில் ஒரே இரவில் 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ஆதம்பாக்கத்தில் ஒரே இரவில் 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Sep 2018 10:00 PM GMT (Updated: 17 Sep 2018 7:27 PM GMT)

ஆதம்பாக்கத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர் 9-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராமன் (வயது 60). இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவர் சமீபத்தில் வீட்டை பூட்டி விட்டு புனேவில் உள்ள மகனை பார்க்க குடும்பத்துடன் சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராமன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதே போல் ஆதம்பாக்கத்தில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஜெனேஷ் (36) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு சென்றார். அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் பூபதி (61). இவர் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்று உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

ஆதம்பாக்கம் குமரகுருபரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சரவணன் (36) தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சென்றார். இவருடைய வீட்டின் பூட்டை உடைத்தும் நகை, பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தனர்.

இதே பகுதியில் வசிப்பவர் ராம்பிரபு (33). இவரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்காக வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இதனை தெரிந்துகொண்ட மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஆதம்பாக்கத்தில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டதால் எவ்வளவு நகை, பணம் கொள்ளைபோனது என தெரியவில்லை. இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக ஆண்டாள் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் இதுவரை பதவி ஏற்காததால் அவரது பணியை சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரே கூடுதலாக கவனித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இரவு நேர ரோந்து பணிகளில் சரிவர ஈடுபடமுடியாததால் தான் இது போன்ற குற்றங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story