இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி: கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிந்தது; சிறையில் அடைப்பு


இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி: கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிந்தது; சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 17 Sep 2018 11:15 PM GMT (Updated: 17 Sep 2018 8:10 PM GMT)

இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைதான 5 பேரின் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை,

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (வயது 29), திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னை ஓட்டேரியை சேர்ந்த சலாவுதீன் (25) ஆகியோர் கடந்த 1–ந் தேதி ரெயில் மூலம் கோவை வந்தனர்.

அவர்கள், கோவையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மற்றும் அவர்களை அழைத்துச்செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக்கையும் (25) சேர்த்து 5 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் (உபா) உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று அவர்கள் 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில், போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்தன.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் நேற்றுடன் அவர்களுக்கு போலீஸ் காவல் முடிவடைந்தது. எனவே போலீசார் அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் நீதிபதி குணசேகரன் (பொறுப்பு) முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அவர்கள் பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 5 பேரை மட்டுமே போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இந்த வழக்கில் கைதான 7 பேருக்கும் கோர்ட்டு ஏற்கனவே விதித்த 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இதனால் போலீசார் அவர்கள் 7 பேரையும் இன்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்துகிறார்கள்.


Next Story