டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது; மின்கம்பங்கள் சாய்ந்தன


டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது; மின்கம்பங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 18 Sept 2018 3:30 AM IST (Updated: 18 Sept 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே சூறைக்காற்றால் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் அவதிப்பட்டனர்.

பொறையாறு, 

நாகை மாவட்டம் பொறையாறு பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்று வீசியது. அப்போது பொறையாறு அருகே கீழ்மாத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.

இதனால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக்காற்றால் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். வெளியே நடமாடுவதை தவிர்த்தனர். சூறைக்காற்றில் கீழ்மாத்தூர் புதுத்தெருவை சேர்ந்த சம்பத், வளர்மதி ஆகியோரின் கூரை வீடுகள் சேதம் அடைந்தன. அப்பகுதியில் உள்ள தென்னை, வாழை, புளியமரங்கள், மாமரங்கள் முறிந்து விழுந்தன. கீழ்மாத்தூர் பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்தன.

இதைப்போல ஒட்டங்காடு வடக்குதெரு பகுதியில் கொளஞ்சி என்பவருடைய கூரை வீடு சூறைக்காற்றால் முற்றிலும் சேதம் அடைந்தது. மேமாத்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த 6 உயரழுத்த மின் கம்பங்களும் சாய்ந்து வயலில் விழுந்தன. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பொறையாறில் இருந்து கீழ்மாத்தூர் வழியாக மயிலாடுதுறைக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசூர், கொத்தங்குடி, பெரம்பூர், மாத்தூர், நெடுவாசல், கூடலூர், மேமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

கீழமாத்தூர், மேமாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மதியம் வரை மின்சார வினியோகம் சீராகவில்லை. பல மணிநேர மின்தடை மற்றும் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு இருப்பதால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறியதாவது:-

திடீரென வீசிய சூறைக்காற்றில் தெருக்கள் மற்றும் வயல் வெளிகளில் இருந்த மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சாய்ந்து கிடப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்சாரம், குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பவுன்ராஜ் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை விரைந்து சீரமைக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதனிடையே கீழமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் விழுந்த மரங்களை பொக்லின் எந்திரம் மூலம் அப்புறப் படுத்தும் பணி நடந்தது.

அதேபோல மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளும் நடந்தன. இந்த பணிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம், வேட்டி-சேலை, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அப்போது அவருடன் கலெக்டர் சுரேஷ்குமார், மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி, தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம், செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் அருண், வட்டார வளர்்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர் களிடம் கூறியதாவது:-

கீழ்மாத்தூர் பகுதியில் சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க துரித நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இப்பகுதியில் 260 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தென்னை, மா, வாழை, உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஜெனரேட்டர் மூலமும் டேங்கர் லாரி மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரு கிறது. சேதமடைந்த வீடுகள் குறித்து வருவாய் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும். மின்கம்பங்களை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story