திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த பெண்ணின் வீட்டுக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கஞ்சா வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள் அந்த வீட்டை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 30–வது வார்டுக்குட்பட்ட குமாரசாமிநகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு அதே பகுதியை சேர்ந்த பாபு மற்றும் அவருடைய மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக வீட்டில் வைத்தே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு கஞ்சா வாங்க வருபவர்கள் குடியிருப்பு பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புலட்சுமியை பலமுறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த உடன் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வதையே அவர் தொழிலாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குமாரசாமி நகரில் உள்ள சுப்புலட்சுமி வீட்டிற்கு கஞ்சா வாங்க வந்த நபர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் சந்திப்பில் திரண்டனர். பின்னர் அவர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் ரங்கசாமி, சபரி தலைமையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு வருவாய் ஆய்வாளர் பரமேஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
ஆனால் கஞ்சா வியாபாரியின் வீட்டிற்கு சீல் வைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சாலையோரம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
இந்த பிரச்சினை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தொடக்கத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த சுப்புலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக கேத்தம்பாளையம் மற்றும் குமாரசாமிநகர் பகுதியில் உள்ள தனது வீடுகளில் வைத்தே கஞ்சா விற்பனையை செய்து வருகிறார். இதனால் கஞ்சா வாங்க வரும் நபர்கள் குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தாலும் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சுப்புலட்சுமி வீட்டிற்கு சீல் வைக்க வேண்டும். அதுவரை இங்கிருந்து நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு போலீசார் பொதுமக்களிடம், சுப்புலட்சுமி வீட்டிற்கு நாங்கள் சீல் வைக்க முடியாது. அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சுப்புலட்சுமியின் வீட்டுக்கு சென்றனர். பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்த உள்ளதை ஏற்கனவே அறிந்து கொண்ட சுப்புலட்சுமி, நேற்று முன்தினம் இரவே குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுப்புலட்சுமியின் வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் வீட்டின் மேல் பகுதியில் உள்ள ஓடுகளையும் கல்லால் உடைத்தனர். இதனால் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
மேலும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் சுப்புலட்சுமி வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாதபடி, வீட்டின் 2 பக்கமும் உள்ள கதவுகளில் சங்கிலியுடன் கூடிய பூட்டை போட்டு பூட்டினார்கள். இதற்கிடையே தலைமறைவான சுப்புலட்சுமியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக அதே பகுதியில் சுப்புலட்சுமியுடன் தொடர்பில் உள்ள சிலர் வீடுகளில் கஞ்சா உள்ளதா? என்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். ஆனால் யார் வீட்டிலும் கஞ்சா கைப்பற்றப்படவில்லை. காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 1.15 மணி வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.