வேலூர் ஊராட்சி ஒன்றியம்: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


வேலூர் ஊராட்சி ஒன்றியம்: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Sept 2018 4:14 AM IST (Updated: 18 Sept 2018 4:14 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்,

வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கிராம ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளதை அனைத்து ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்படுவதாகவும், ஆனால் வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே அரசு ஆணையின்படி மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ரூ.4,740, புதிய துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.5,410, பழைய துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.6,460 ஊதியமாக வழங்க வேண்டும், 2017-2018-ம் ஆண்டுக்கான சீருடை வழங்க வேண்டும், கூடுதல் பணிபார்க்கும் ஆபரேட்டர்களுக்கு ஒரு மோட்டாரை இயக்க ரூ.250 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

இந்தக் கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கோரிக்கையை நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தனர். அதன்படி அவர்கள் வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

அதில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதால் கிராம ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி மற்றும் குப்பைகளை அள்ளும் பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 ஆபரேட்டர்கள் மட்டுமே இருப்பதாகவும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story