5 நாள் வழிபாட்டுக்கு பின்னர் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


5 நாள் வழிபாட்டுக்கு பின்னர் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 18 Sept 2018 6:17 AM IST (Updated: 18 Sept 2018 6:17 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட ஏராளமான விநாயகர் சிலைகள் 5 நாள் வழிபாட்டுக்கு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வஜனிக் மண்டல்கள் மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.

1½ நாள் வழிபாட்டுக்கு பின்னர் 43 ஆயிரம் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இந்தநிலையில், 5-வது நாளான நேற்று பக்தர்கள் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், குளம் மற்றும் மாநகராட்சியின் செயற்கை குளம் ஆகிய நீர்நிலைகளில் கரைத்தனர்.

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளுக்கு லாரிகள், சரக்குவேன், தள்ளுவண்டிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும் ஏராளமானவர்கள் தங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்த கணபதி சிலைகளை கையில் ஏந்தியபடியே கொண்டு வந்தனர். அப்போது, வண்ண, வண்ண கலர் பொடிகளை தூவி ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக வந்தனர்.

சிவாஜி பார்க், கிர்காவ், ஜூகு கடற்கரைகளில் கரைக்க கொண்டு வந்த விநாயகர் சிலைகளை கடற்கரையில் வைத்து பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

அப்போது, அவர்கள் தங்களின் வேண்டுதல்களை விநாயகரின் காதில் சொல்லி வேண்டிக்கொண்டனர். பின்னர் சிலைகளை ஆண்கள் கடலுக்குள் தூக்கிச்சென்று கரைத்தனர். இத்துடன் விநாயகரின் தாயான கவுரி சிலைகளும் கரைக்கப்பட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் மும்பையில் பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Next Story