மத்திய அரசுக்கு பயந்து ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன, முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
மத்திய அரசுக்கு பயந்து ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் குற்றம் சாட்டினார்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு கழக அவைத்தலைவரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். ராசிபுரம் நகர செயலாளர் வி.டி.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் கோபால், தேவராஜன், கோவிந்தன், மணிகண்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி ஜெபராஜ் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது நம்பிக்கை நட்சத்திரமாக கருதியது டி.டி.வி. தினகரனை தான். அவருக்கு அம்மா பேரவை செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைப்பு செயலாளர், கழக பொருளாளர் என பல்வேறு பதவிகளை ஜெயலலிதா வழங்கினார். அன்றைக்கே தனது வாரிசாக ஜெயலலிதாவாலேயே அடையாளம் காட்டப்பட்டவர் தான் டி.டி.வி. தினகரன்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது ஜெயலலிதாவின் ஆட்சி என கூறுகிறார். ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் மத்திய அரசுக்கு பயந்து தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதே. இது ஜெயலலிதா ஆட்சியா?.உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி. உணவு பாதுகாப்பு திட்டம், நீட் தேர்வு என ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்துள்ளர்களே இது ஜெயலலிதா ஆட்சியா? உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் அமைச்சர் காமராஜ் அரசாணையை சும்மா வெளியிட்டதாக கூறுகிறார். மேலும் நீட் தேர்வால் ஏழை மாணவி அனிதா மன வேதனையில் இறந்தார். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர டி.டி.வி.தினகரனை முதல்-அமைச்சராக ஆக்குவதற்கு உறுதுணையாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கழக அவைத்தலைவர் அன்பழகன், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஏ.பி.பழனிவேல், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணை செயலாளர் ராஜ்குமார், தலைமைக்கழக பேச்சாளர் ஈரோடு ரவி, முன்னாள் எம்.எல்.ஏ.சம்பத்குமார், முன்னாள் நகர வங்கித்தலைவர் வி.திருப்பதி உள்பட பலர் பேசினார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் திருச்சி தியாகராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story