திசையன்விளையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு


திசையன்விளையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்  அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Sept 2018 2:30 AM IST (Updated: 18 Sept 2018 6:15 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.

திசையன்விளை, 

திசையன்விளையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் பங்கேற்றார்.

பொதுக்கூட்டம்

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க உத்தரவிட்ட முதல்–அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் திசையன்விளை நேரு திடலில் நடந்தது. பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ. வரவேற்றார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், வருவாய் கிராமங்கள் தேவையான அளவு இல்லாத நிலையில், மக்களுக்காக திட்டம்– திட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற அடிப்படையில் தனி தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை புதிதாக 27 தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகத்தான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் தமிழகம் 2–வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அதற்காக மருது சகோதரர்களை போல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். 1½ கோடி தொண்டர்களுடன் இந்திய அளவில் 3–வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. இதனை கலைக்க நினைப்பவர்கள் விரைவில் கலைந்து போவார்கள் என்றார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், செயலாளர் இ.நடராஜன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனி சங்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர் பாலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். திசையன்விளை நகரப்பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ஜான்சிராணி முருகானந்தம் நன்றி கூறினார்.


Next Story