தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார்.
நெல்லை,
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார்.
பிரசார பயணம்நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ‘‘இந்தியாவை பாதுகாப்போம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்’’ என்ற பிரசார இயக்கம் குமரி முதல் திருப்பூர் வரை நடக்கிறது. பிரசார இயக்க வாகனங்கள் திருப்பூருக்கு சென்று பிரசாரத்தை முடிவு செய்கின்றன. அங்கு வருகிற 23–ந்தேதி அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திரமோடி கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக விலைவாசி உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்றபோது 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 104 டாலராகவும், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.49.60 ஆகவும் இருந்தது. ஆனால், தற்போது 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக குறைந்திருக்கும் நேரத்தில் பெட்ரோல் விலை ரூ.90–ஐ தொட்டு விட்டது. கலால் வரி, வாட் வரி என ரூ.23 லட்சம் கோடிகளை மக்களிடம் இருந்து தனியார் நிறுவனம் போல் கொள்ளை அடித்து உள்ளது.
எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில், மக்கள் பிரச்சினைகளை திசை திருப்ப எச்.ராஜா போன்றோர் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்க நினைக்கும் எச்.ராஜாவை கைது செய்ய தமிழக அரசு தயங்குகிறது.
ஆனால் பா.ஜ.க. ஒழிக என்று கூறிய மாணவியை காவல்துறை உடனடியாக கைது செய்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய மாணவியை கைது செய்கிறது. திருமுருகன்காந்தியை திரும்ப, திரும்ப கைது செய்கிறது. விவசாய போராட்டத்தை தொடங்கி வைத்ததற்காக நல்லகண்ணு மீது வழக்கு போட்டனர். ஆனால் மத மோதல்களை உருவாக்கும் எச்.ராஜாவை கைது செய்யவில்லை. எனவே, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்.
தேர்தலில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைத்து போராடும். தற்போது வெவ்வேறு கருத்துக்களை கூறி வந்தாலும், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணை தலைவர் வீரபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகர்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் சந்தானம், இளைஞர் மன்ற மாநில செயலாளர் பாலமுருகன், நெல்லை மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், அம்பை ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து முத்தரசன் அம்பை பகுதிகளுக்கு சென்று பிரசார இயக்கத்தில் கலந்து கொண்டார்.