பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோருபவர்கள் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோருபவர்கள் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:00 AM IST (Updated: 18 Sept 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் கோருபவர்கள் 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில், பட்டாசு கடைகள் அமைக்க தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது விண்ணப்ப மனுக்களுடன் உரிமம் கோரும் கடை, இடத்திற்்கான கட்டிட வரைபடம்-5, மனுதாரரின் சமீபத்திய பாஸ்போட் அளவு புகை படங்கள்-2, உரிமம் கோரும் இடத்தின் மனுதாரரின் சொந்த உரிமை குறித்த ஆவணம், வாடகை இடமாக இருப்பின் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்தப்பத்திரம், நடப்பு நிதியாண்டில் உள்ளாட்சி-நகராட்சியில் செலுத்தப்பட்ட வரி ரசீது ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.

28-ந்தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. மேற்படி, உரிய தேதியில் அனைத்து முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கான தற்காலிக உரிமமானது வருகிற அக்டோபர் மாதம் 20-ந்தேதிக்குள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க பட்டாசு உரிமம் கோரி பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய விரும்புகிறவர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்கள் மற்றும் இணைப்புகளுடன் வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அதன்படி, படிவம் ஏஇ-5 ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் வரைபடங்கள் உள்பட இதர ஆவணங்கள் 6 பிரதிகளுடன், உரிய கணக்கு தலைப்பில் தற்காலிக உரிம கட்டணம் ரூ.500- செலுத்தப்பட்டமைக்கான ரசீதுடன் விண்ணப்பத்தினை வருகிற 28-ந் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்திட வேண்டும். 28-ந்தேதிக்கு பிறகு காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story