கட்சி சின்னம் வரைவதில் மோதல்: அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து
திருவாரூர் அருகே கட்சி சின்னம் வரைவதில் ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து போலீசார் அவருடைய அண்ணன்-அண்ணி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 40). அ.தி.மு.க.வை சேர்ந்தவர். இவருடைய அண்ணன் ஜெய்சங்கர். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர். திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக சுவர்களில் கட்சி சின்னம் வரைவது தொடர்பாக ரமேஷ்குமார், ஜெய்சங்கர் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் ரமேஷ்குமார் வீட்டுக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த மோகன்குமார் என்பவர் வந்தார்.
அப்போது அங்கு வந்த ஜெய்சங்கர் கட்சி சின்னம் வரைவது சம்மந்தமாக இருந்த முன்விரோதம் காரணமாக மோகன்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை ரமேஷ்குமார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் கத்தியால் ரமேஷ்குமாரை குத்தியுள்ளார். மேலும் அங்கு வந்த ஜெய்சங்கரின் மனைவி திலகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் ராமன் ஆகியோர் ரமேஷ்குமார், மோகன்குமாரை தாக்கினர்.
இதில் காயமடைந்த ரமேஷ்குமார் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரமேஷ்குமார் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஜெய்சங்கர், திலகா, ராமன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் ஜெய்சங்கர் தன்னை தனது தம்பி ரமேஷ்குமார் மற்றும் மோகன்குமார் ஆகியோர் தாக்கியதாக கூறி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரமேஷ்குமார், மோகன்குமார் ஆகிய 2 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story