கோவையில் மக்கள் நீதிமய்யம் கட்சி பயிலரங்கம்; கமல்ஹாசன் பங்கேற்பு


கோவையில் மக்கள் நீதிமய்யம் கட்சி பயிலரங்கம்; கமல்ஹாசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 Sept 2018 4:35 AM IST (Updated: 19 Sept 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் கட்சி பயிலரங்கத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். மேலும் அவர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

கோவை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான பயிலரங்க கூட்டம், கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் நேற்று தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் அருணாசலம், செயற்குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, பாரதி கிருஷ்ணகுமார், சவுரிராஜன், தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் சினேகன் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 100–க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்த ஆலோசனைகளை செயற்குழு உறுப்பினர்கள் வழங்கினர். இந்த கூட்டத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2–வது நாள் பயிலரங்கத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு சென்று பயிலரங்கில் பங்கேற்கிறார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவ– மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மக்களுடனான பயணத்தை தொடங்கி பேசுகிறார். அதன்பின்னர் பொள்ளாச்சி மின்னல் மகாலில் நடைபெறும் அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

திருப்பூர் மாவட்டம் பொன்னிவாடியில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மக்களுடனான பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து தாராபுரம், காங்கேயம், பல்லடம், திருப்பூர் நகரில் சின்னாண்டிபாளையம், வீரபாண்டி பிரிவு, புதிய பஸ் நிறுத்தம், எஸ்.ஏ.பி. தியேட்டர் சந்திப்பு, பப்பீஸ் ஓட்டல் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.


Next Story