கோவையில் ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக கோரி கோவையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவை,
ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பதவி விலக கோரி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:–
அ.தி.மு.க. அரசின் முறைகேடுகள் குறித்து கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகளில் எல்லாம் தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடைபெற்ற ஊழலில் அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு கொடுத்தது தொடர்பான வழக்கில், ஐகோர்ட்டு ஒரு கேள்வியை எழுப்பி உள்ளது. உலக வங்கி கடன் விதிமுறைப்படி உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் அந்த ஒப்பந்தம் செல்லாது. கடனும் வழங்காது. இந்த விதிமுறை பின்பற்றப்பட்டதா? என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. குட்காவுக்கு தடைவிதித்தவர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதாவுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குட்காவை விற்பனைக்கு அனுமதித்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க.வினர் பதில் சொல்லியாக வேண்டும். இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நா.கார்த்திக் எம்.எல்.ஏ பேசும்போது கூறியதாவது:– கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை சூயஸ் நிறுவனத்திடம் 26 ஆண்டுகளுக்கு கொடுத்துள்ளனர். கோவை நகரை தனியார் நிறுவனத்திடம் தாரை வார்த்துவிட்டனர். ஒப்பந்த முறைகேடுகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது, உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி தேர்தலை நடத்த அச்சப்படுகிறார். தைரியம் இருந்தால் தேர்தலை நடத்தி பாருங்கள். தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்தகுமார், குமரேசன், குப்புசாமி, உமா மகேஸ்வரி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டைஅப்பாஸ், வக்கீல்கள் கணேஷ் குமார், அருண் மொழி, தண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் மாரிச் செல்வம், கணபதி பகுதி செயலாளர் கோவை லோகு, முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் மேயர் வெங்கடாசலம், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். ஆர். மோகன் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு. ராமகிருஷ்ணன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த வடிவேல், தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இலக்கியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பையாகவுண்டர், ஒன்றிய செயலாளர்கள் அறிவரசு, சேனாதிபதி, கல்யாணசுந்தரம், சுரேந்திரன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும், ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலகக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் எம்.எல்.ஏ மா.ப.அருண்குமார், கணேஷ்மூர்த்தி, பத்மாலையா சீனிவாசன், டி.பி.சுப்பிரமணியம், தியாகராஜன், ராஜா, பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.