மந்திரி எச்.டி.ரேவண்ணா மீதான நில முறைகேடு புகார் குறித்து தேவேகவுடா குடும்பத்தினர் பேசாமல் இருப்பது ஏன்?


மந்திரி எச்.டி.ரேவண்ணா மீதான நில முறைகேடு புகார் குறித்து தேவேகவுடா குடும்பத்தினர் பேசாமல் இருப்பது ஏன்?
x
தினத்தந்தி 19 Sept 2018 5:31 AM IST (Updated: 19 Sept 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி எச்.டி.ரேவண்ணா மீதான நில முறைகேடு புகார் குறித்து தேவேகவுடா குடும்பத்தினர் பேசாமல் இருப்பது ஏன்? என்று எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள அவருடைய இல்லத்தில் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால், பா.ஜனதா ஆட்சி அமைப்பது குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேவேகவுடா குடும்பம் கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் 55 ஏக்கர் அரசு நிலத்தை மந்திரி எச்.டி.ரேவண்ணா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார் என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.

மற்றவர்களை கடுமையான முறையில் குறை சொல்லும் குமாரசாமியின் குடும்பத்தினரை என்னவென்று அழைக்க வேண்டும்?. மந்திரி எச்.டி.ரேவண்ணா மீதான நில முறைகேடு புகார் குறித்து தேவேகவுடா குடும்பத்தினர் பேசாமல் இருப்பது ஏன்?.

ஏ.மஞ்சு கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். எச்.டி.ரேவண்ணாவின் நில முறைகேடு விவகாரம் வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. முன்னாள் பிரதமர் தேவேகவுடா குடும்பத்தினர் நில முறைகேட்டில் ஈடுபட்டு, கொள்ளையடித்து உள்ளனர்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

Next Story