பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தென்காசி கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Sep 2018 9:00 PM GMT (Updated: 19 Sep 2018 12:39 PM GMT)

பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தென்காசி, 

பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரை சேர்ந்த வெள்ளப்பாண்டியன் மனைவி கமலா (வயது 55). இவர் கடந்த 5.12.2010 அன்று காலை அவரது வீட்டின் முன்பு உள்ள கழிவு நீர் ஓடையில் கிடந்த குப்பைகளை அள்ளி தெரு ஓரமாக போட்டார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் காளிதாஸ் (30) என்பவர் கமலாவை அவதூறாக பேசி உள்ளார்.

பின்னார் மாலை 4 மணிக்கு கமலா வீட்டு முன்பு அவரது மகள் கற்பகம் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சுந்தரம், காளிதாஸ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் மனைவி தீபா மாரி (35) ஆகியோர் அங்கு வந்து கமலாவை அவதூறாக பேசி உள்ளனர். தொடர்ந்து அவரை கொலை செய்யுமாறு சுந்தரம், காளிதாசிடம் கூறியுள்ளார்.

உடனே காளிதாஸ் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கமலாவின் தலையில் வெட்டியும், கமலாவின் காலில் தீபா மாரி கம்பால் தாக்கியும் உள்ளனர். அங்கு இருந்தவர்கள் சத்தம் போடவே காளிதாஸ் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கு தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி திருவேங்கட சீனிவாசன் விசாரித்து காளிதாசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையும், தீபா மாரிக்கு ரூ.1000 அபராதமும், கட்ட தவறினால் ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுந்தரம் இறந்து விட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.


Next Story