தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.7 லட்சம் மோசடி
தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,
தேனி மாவட்டம் கீழக்கூடலூர் சாமாண்டிபுரத்தை சேர்ந்த மலைச்சாமி மகன் ரகு (வயது 31). இவர் வக்கீலாக உள்ளார். இவரிடம் கோவை கே.கே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்த துரைராஜ் மகன் வெற்றிவேல் (35) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார்.
வெற்றிவேலும் அவருடைய மனைவி கலைவாணியும் சேர்ந்து மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி உள்ளனர்.
இதனை நம்பிய ரகு பல்வேறு தேதிகளில் ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்தை வெற்றிவேலுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் லாப தொகையாக ரூ.27 ஆயிரத்து 135 மட்டும் ரகுவிடம் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு எந்தவித லாப தொகையையோ, முதலீடு தொகையையோ திருப்பிக் கொடுக்காமல் வெற்றிவேல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதனால், வெற்றிவேலும், அவருடைய மனைவியும் தன்னிடம் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரகு புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து வெற்றிவேல், கலைவாணி ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்தார். இதில் வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story